சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியில் பல்லி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள டெக்கான் என்ற பிரபல தனியார் உணவகத்தில் அப்பாஸ் என்பவர் நேற்று மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். உணவக ஊழியர்கள் பறிமாறிய மட்டன் பிரியாணியை சுவைத்து சாப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பாதி சாப்பிட்டுக்கொண்டிருந்த போது பிரியாணியில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஓட்டல் ஊழியர்களை அழைத்து பிரியாணி தட்டை காண்பித்த அப்பாஸ், பல்லி இருப்பது குறித்து முறையிட்டுள்ளார்.
மேலும் அதற்கு உணவக ஊழியர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதோடு, அருகில் தான் மருத்துவமனை உள்ளது நீங்கள் அங்கே சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என அலட்சியமாக பதிலளித்துள்ளனர். பல்லி விழுந்த பொருளை சாப்பிட்டால் விஷமாக மாறும் தன்மை கொண்டது என்பதாலும், லேசான வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்பாஸ் கூறியதாவது: பணி நிமிர்த்தமாக புரசைவாக்கம் வந்திருந்தேன். மதிய சாப்பாடு சாப்பிட சரவணா ஸ்டோர்ஸ் அருகில் உள்ள டெக்கான் என்ற உணவகத்தில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டேன். பாதி பிரியாணி சாப்பிட்டு முடித்த பிறகு அதில் பல்லி இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு உணவக ஊழியர்களிடம் கூறியதற்கு முறையாக பதில் அளிக்காமல் மெத்தனமாக செயல்பட்டனர். சிறிதும் மனிதாபமானமின்றி செயல்பட்டனர் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு ஆரணியில் உள்ள ஸ்டார் பிரியாணி உணவகத்தில் கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்டு 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வரும் நிலையிலும் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஹோட்டல் சாப்பாட்டு பிரியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.