அண்ணனால் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது தங்கை கர்ப்பம் அடைந்ததால், அவமானம் தாங்காமல் அந்த சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா ரிப்பன்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வரும் நிலையில், அவர்கள் தினமும் வேலைக்குச் சென்று விடுவார்கள். இதனால், அந்த 16 வயது சிறுமி மட்டும், வீட்டில் தனியாக இருந்து வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த பகுதியில் உள்ள சங்கராபுராவை சேர்ந்தவர் இளம் பெண்ணின் பெரியப்பா மகன் 24 வயதான ராகவேந்திரா, அந்த சிறுமிக்கு அண்ணன் முறையாகும். 

இதன் காரணமாக, ராகவேந்திரா அடிக்கடி மைனர் பெண்ணின் வீட்டுக்கு வந்து செல்வார். அண்ணன் என்பதால் மைனர்பெண்ணும் அவருடன் சகஜமாகப் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைனர்பெண்ணின் பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டனர். இதனால் மைனர்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, அண்ணன் ராகவேந்திரா அடிக்கடி அந்த சிறுமியான தங்கை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது அண்ணன் தானே என்று நம்பி அந்த சிறுமியும் சகஜமாகப் பழகி வந்துள்ளார்.

ஆனால், தங்கை என்று தெரிந்தும் அண்ணன் ராகேவந்திரா அந்த சிறுமி மீது சபலப்பட்டு உள்ளார். இப்படி, சிறுமி தனியாக இருக்கும் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட அண்ணன் ராகவேந்திரா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அத்துடன், “இது குறித்து வெளியே கூறினால், என்னைக் கொலை செய்து விடுவேன்” என்றும், அண்ணன் கடுமையாக மிரட்டி உள்ளார். இதனால், பயந்து போன அந்த சிறுமி, இது குறித்து யாரிடமும் கூறாமல் பயந்து இருந்துள்ளார். இந்த சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அண்ணன் ராகவேந்திரா, மீண்டும் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்து, தன்னுடைய தங்கையைத் தொடர்ந்து மிரட்டி மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். இதன் காரணமாக, அந்த சிறுமி ஒரு கட்டத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளார்.

தான் கர்ப்பம் அடைந்திருப்பது அந்த சிறுமிக்குத் தெரிய வந்த நிலையில், தன் அண்ணனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பம் அடைந்திருப்பது வெளியே தெரிந்தால், அது தன் குடும்பத்துக்கே அவமானம் என்று கருதிய அந்த சிறுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, வீடு திரும்பிய சிறுமியின் பெற்றோர், மகள் தூக்கில் தொங்கியதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளனர். 

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், தற்கொலை செய்துகொள்ளும் முன், சிறுமி கைப்பட எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அதில், “பெரியப்பாவின் மகன் ராகவேந்திரா என்னைப் பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் நான் இது கறித்து வெளியே கூறவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

“ஆனால், நான் தற்போது கர்ப்பம் அடைந்துள்ளேன் என்றும், இது வெளியே தெரிந்தால் எனது பெற்றோருக்கு அவமானம் ஆகிவிடும் என்பதால், நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று, எழுதி இருந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராகவேந்திராவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.