மணாலி மற்றும் லே இடையே உள்ள 46 கி.மீ மற்றும் பயண நேரத்தை நான்கு முதல் ஐந்து மணி நேரம் குறைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த 'அடல் சுரங்கப்பாதையை' இமாச்சல பிரதேச மாநிலம் ரோட்டங் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சென்று திறந்து வைத்தார். மணாலி-லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்க ரோதங் என்ற இடத்தில் சுரங்கப்பாதை கட்ட கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் 3-ந்தேதி, அப்போதைய வாஜ்பாய் அரசு முடிவு செய்தது.

அதையடுத்து, கட்ட தொடங்கப்பட்ட ரோதங் சுரங்கப்பாதைக்கு வாஜ்பாய் நினைவாக ‘அடல் சுரங்கப்பாதை’ என்று பெயர் சூட்ட கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மோடி அரசு முடிவு செய்தது. எல்லை சாலை அமைப்பு, தொடர்ந்து போராடி சுரங்கப்பாதை பணிகளை நிறைவு செய்துள்ளது. 

இதனையடுத்து அடல் சுரங்கப்பாதை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சுரங்கப்பாதையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பளித்தார். திறப்பு விழாவை தொடர்ந்து, லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கில் சிஸ்சு என்ற இடத்திலும், மற்றும் சோலங்கி பள்ளத்தாக்கிலும் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இது, உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகும். 9.02 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை மூலம் எல்லா வானிலை காலத்திலும், மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்குக்கு செல்லலாம்.

இப்பாதை காரணமாக, சுற்றி செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், மணாலி-லே இடையிலான தூரம் 46 கி.மீ. குறையும். பயண நேரம் 5 மணி நேரம் குறையும். கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில், அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இது, இருவழி சுரங்கப்பாதை ஆகும். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் கார்களும், 1,500 சரக்கு வாகனங்களும் செல்லும்வகையில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, பிரதமர் மோடி பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர்,

''மத்தியில் 10 ஆண்டுகளில் ஒரு கட்சி ஆண்டபோது அடல் சுரங்கப்பாதை முதல் லடாக்கில் உள்ள தவுலத் ஓல்டி விமானப்படைத் தளம் வரை, தேஜாஸ் விமானம் தயாரிப்பு என அனைத்தும் தாமதிக்கப்பட்டன, மறக்கப்பட்டன. இந்தத் திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டதற்கும், மறக்கப்பட்டதற்கும் என்ன அழுத்தம், என்ன கட்டாயம் பின்புலத்தில் வந்தது?

என்னுடைய அரசு, எல்லையில் கட்டமைப்பை வலுப்படுத்தத் தேவையான அனைத்து வலிமையான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. இதுபோன்று இதற்குமுன் எப்போதும் நடந்தது இல்லை. எல்லையில் சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன் எல்லைப்பகுதியில் அமைக்கப்படுவதற்காகப் போடப்படும் திட்டங்கள் அனைத்தும் காகிதத்திலேயே இருந்தன. நடைமுறைக்கு வருவதில் பல்வேறு தடைகளையும், சிரமங்களையும் சந்தித்தன.

அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 2002-ம் ஆண்டு இந்தச் சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார். அடுத்த ஆட்சிக்கு வந்தவர்கள் இந்தத் திட்டத்தையே மறந்துவிட்டார்கள். கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 1,300 மீட்டருக்கு மட்டுமே பணிகள் நடந்தன.

அப்படியே சென்றிருந்தால், 2040 ஆம் ஆண்டில்தான் இந்தத் திட்டம் முடிந்திருக்கும். ஆனால், 2014-ம் ஆண்டில் என்னுடைய தலைமையில் ஆட்சிக்கு வந்தபின் இந்தத் திட்டம் வேகமெடுத்தது. ஆண்டுக்கு 300 மீட்டர் என்பதிலிருந்து 1,400 மீட்டர் பணிகள் முடிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

26 ஆண்டுகள் நடக்கவேண்டிய பணிகளை என்னுடைய அரசு வெறும் 6 ஆண்டுகளில் முடித்துள்ளது. இதுமட்டுமல்ல தவுலத் பெக் விமானப்பாதையும் கடந்த 40 ஆண்டுகளாக முடிக்காமல் இருந்தது.

எந்தவிதமான அரசியல் விருப்பமும் இல்லை. நான் சொல்லக்கூடிய 12-க்கும் மேற்பட்ட தி்ட்டங்கள் அனைத்தும் ராஜாங்க ரீதியில் முக்கியமான திட்டங்கள். ஆனால், பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்பு விஷயங்களில் முன் சமரசம் செய்யப்பட்டது.

ஆனால், என்னுடைய ஆட்சியில் பாதுகாப்புத் துறைக்கும், நாட்டின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தேசிய நலனை விடவும், தேசத்தைப் பாதுகாப்பதை விடவும் எங்களுக்கு எதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. ஆனால், தேசத்தின் நலன் புறக்கணிப்பட்டதையும், சமரசம் செய்யப்பட்ட காலத்தையும் தேசம் பார்த்துள்ளது.

பிஹாரில் உள்ள கோசி மேகா பாலமும் வாஜ்பாய் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தத் திட்டம் கடந்த மாதம் என்னால் திறந்துவைக்கப்பட்டது.

பாதுகாப்புத் துறையில் பல சீர்திருத்தங்களை அரசு கொண்டுவந்துள்ளது. உள்நாட்டிலேயே தளவாடங்கள் தயாரிக்கவும், தேவையை நிறைவு செய்யவும் முன்னுரிமை அளிக்கப்படும்''.

என்று கூறினார்.