தோனி நேற்றைய போட்டியில் 2 புதிய சாதனைகள் படைத்த நிலையில், நாளைய போட்டியில் மேலும் 2 புதிய சாதனைகள் படைக்க உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்று நடைபெற்ற 14 வது லீக் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும் - ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. இந்த போட்டியில் சென்னை அணியில் மூன்று மாற்றமாக முரளி விஜய், ருதுராஜ் கெய்க்வாட், ஹேசில்வுட் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக காயத்தில் இருந்து குணமடைந்த அம்பத்தி ராயுடு, வெய்ன் பிராவோ மற்றும் ஷர்துல் தாகூர் சேர்க்கப் பட்டனர்.

கடந்த 2 போட்டிகளிலும் படு தோல்வியைத் தழுவிய சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு களம் கண்டனது. நேற்றைய போட்டியைச் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், இறுதிவரை கேப்டன் தோனி போராடிய நிலையிலும், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால், சென்னை அணி தொடர்ச்சியாக 3 வது போட்டியில் தோல்வியைச் சந்தித்து உள்ளது.

இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, ஒரு வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் அணிகளுக்கான தர வரிசை பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது. 

ஆனாலும், நேற்றைய போட்டியில் சென்னை அணி தோற்றாலும், கேப்டன் தோனி 2 சாதனைகளை படைத்தார். 

அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டன் டோனி விளையாடிக்கொண்டு இருக்கிறார். இவருடன் இணைந்து சுரேஷ் ரெய்னாவும் விளையாடி வந்தார். ஆனால், தற்போதைய தொடலில் இருந்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் சுரேஷ் ரெய்னா போட்டியிலிருந்து வெளியேறினார். 

அதே நேரத்தில், சுரேஷ் ரெய்னா இந்த ஐபிஎல் தொடரில் 193 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இது தன் ஐபிஎல் போட்டிகளில் ஒரு வீரர் விளையாடிய அதிகப் பட்ச போட்டியாக இருந்தது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வது போட்டியில் விளையாடிய போது கேப்டன் டோனி 193 போட்டிகளில் விளையாடி சமன் செய்திருந்தார்.

இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி, நேற்றைய போட்டியில் விளையாடியதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தன் வசப்படுத்தி உள்ளார். இந்த சாதனையானது, இதற்கு முன் சுரேஷ் ரெய்னாவின் வசம் இருந்தது. தோனி இது வரை மொத்தமாக 194 போட்டிகளில் விளையாடி, இந்த புதிய சாதனையை படைத்து இருக்கிறார். இதில், 164 போட்டிகள் சென்னை அணிக்காகவும், 30 போட்டிகள் புனே அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் சுரேஷ் ரெய்னா 2 ஆம் இடம் பிடித்துள்ளார்.

அதே போல், ஐபிஎல் தொடரில் 4 ஆயிரத்து 500 ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலிலும் அவர் இணைந்து உள்ளார். அதாவது, நேற்றைய போட்டியில், தோனி 24 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், ஐபிஎல் தொடரில் 4500 அடித்த வீரர் என்ற மைல்கல்லை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, தோனி 47 ரன்கள் சேர்ந்தார். இதனால், ஐபிஎல் தொடரில் 4,500 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு சுரேஷ் ரெய்னா, கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஐபிஎல் தொடரில் 4,500 ரன்கள் அடித்து உள்ளனர்.

அத்துடன், நாளை போட்டியில் கேப்டன் தோனி, 2 புதிய சாதனைகளைப் படைக்க இருக்கிறார். ஐபிஎல் தொடரில் கேப்டன் தோனி, இது வரை 299 சிக்ஸர்களை விளாசி உள்ளார். நாளை போட்டியில் அவர் ஒரு சிக்ஸர் அடிப்பதின் மூலம், ஐபிஎல் தொடரில் 300 வது சிக்ஸர் அடிக்கும் முதல் வீரர் என்ற பெருமையை அவர் படைக்கிறார். 

மேலும், விக்கெட் கீப்பராக ஐபிஎல் போட்டில் தோனி இதுவரை 99 கேட்ச்கள் பிடித்துள்ள நிலையில், நாளைய போட்டியில் இன்னும் ஒரு கேட்ச் பிடித்தால்   ஐபிஎல் போட்டிகளில் அவர் 100 கேட்ச்கள் பிடித்த 2 வது வீரர் என்ற பெருமையைப் பெற உள்ளார். இதில், முதலிடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் உள்ளார். இதன் காரணமாக, கேப்டன் தோனிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனால், சென்னை ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.