கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மார்ச் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையிலான ஆறு மாத கால கட்டத்திற்கு, வங்கிகளில் கடன் தவணைகள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கியது. ஆனால் ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆறுமாத காலத்திற்கு வங்கிகள் வட்டிக்கு வசூலித்தன.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது வணிகத்தின் மீது மட்டும் அக்கறை காட்டாமல் மக்கள் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் வங்கிக் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த சூழலில் 2  கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்ய முடிவெடுத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், தனிநபர் கடன், கல்விக் கடன், வாகன கடன், கிரெடிட் கார்டில் கடன் பெற்றது, சிறு குறு தொழில் கடன் ஆகியவற்றுக்கு வட்டிக்கு வட்டி  வசூல் இல்லை.  குறிப்பிட்ட இந்த ஆறு மாதங்களில் கடன் தவணையை முறையாகச் செலுத்தியவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

வட்டிக்கு வட்டி விவகாரத்தில் முன்னாள் தலைமைத் தணிக்கையாளர் ராஜீவ் மெஹரிஷி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு இந்தப் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

அனைத்து வகை கடன் வாங்குபவர்களுக்கும் வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்வது பல வங்கிகளுக்கும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில் நிதிச்சுமையைத் தாங்குவது என்பது சாத்தியமில்லை. எனவே இந்த 6 மாத கால இடை வெளியில் வட்டிக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வதற்கான நிவாரணம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய கடனாளிகளுக்கு மட்டுமே என்றும் இது 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் அக்டோபர் 5ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.