பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் 4-ம் தேதி நடக்கிறது!

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல்  4-ம் தேதி நடக்கிறது! - Daily news

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகிற 4 தேதி நடத்தப்படும் என கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. 11 ஆண்டுகளுக்கு பின்னர் பாரம்பரியமான சென்னை மாநகராட்சியை கைப்பற்றிய தி.மு.க.வில் தற்போது மேயர் மற்றும் துணை மேயர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பரபரப்பான சூழ்நிலையில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் தி.மு.க.வை சேர்ந்த 81 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஒருவரை தேர்ந்தெடுக்க ஆலோசனை நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து துணை மேயரையும் தேர்ந்தெடுக்க தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையின் 2-வது தளத்தில் கடந்த 6 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மன்ற கூட்டரங்கம் தற்போது சுத்தம் செய்யப்பட்டு, புனரமைக்கப்பட்டு வருகிறது. மன்ற கூட்டத்தில் உள்ள இருக்கைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. இதனையடுத்து வருகிற 2-ந்தேதி புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்க உள்ளனர். பின்னர் மேயர் பதவிக்கான தேர்தல் வருகிற 4-ந்தேதி நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் சென்னையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வரும் 2-ம் தேதி காலை பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள். தொடர்ந்து வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி காலை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும், மதியம் துணை மேயருக்கான தேர்தலும் நடத்தப்படும் என தெரிவித்தார்.


 

Leave a Comment