சில தினங்களுக்கு முன்பு , ஜெ.பி.நட்டா கார் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆளும் டி.எம்.சி அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே பெரிய கருத்து மோதல் நடந்தது. இதனால் ஆளுநரின் அறிக்கையை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசாங்கத்திடம் அறிக்கை கோரியுள்ளது. இந்த விவகாரத்தால் மேற்கு வங்கத்தில்  ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று பேச்சுக்கள் எழுந்தன. 


மேற்கு வங்கத்தில் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடுமையான நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. இதனால் தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. 


இந்நிலையில் ஜல்பைகுரியில் நடந்த பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது , ‘’ பாஜக, என்னைப் பயமுறுத்த முயற்சிக்கும்போது நான் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். முடிந்தால் எனது ஆட்சியைக் கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி பாருங்கள். என்ன நடக்கிறது என நான் பார்க்கிறேன். ஒரு வேளை அப்படி நடந்தால் எனக்கு அது நல்ல விஷயம்தான். எனது பணிச்சுமை குறையும், நான் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தி உங்கள் எல்லா வாக்குகளையும் என்னால் கவர முடியும். 


என்ஆர்சி பட்டியலில் 19 லட்சம் வாக்காளர்கள் பெயரை மத்திய அரசு நீக்கியுள்ளது. மத்திய பாஜக அரசு சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி, பணிகள் முடிந்துவிட்டதாக சொல்கிறது. என்ஆர்சி-க்கும், என்பிஆருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன? பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் இல்லை. 


நாடாளுமன்றத் தேர்தலில், டி.எம்.சி வடக்கு பெங்காலிலிருந்து ஒரு இடத்தையும் வெல்லவில்லை. நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? நாங்கள் என்ன அநீதி செய்தோம்? அனைத்து இடங்களையும் பாஜக வென்றது? ’’ என்று இருக்கிறார்.