மலைவாழ் சமூக மக்களுக்கான பெண் குழந்தைகள் உயர்நிலைக் கல்வி ஊக்கத் திட்டத்தை ரத்து செய்தது ஏன்?, என மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பினார்.

டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் ‘பட்ஜெட்’ விவாதத்தில் கலந்துகொண்டு தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு பேசியதாவது: இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் ‘பட்ஜெட்’டில் பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சகத்துக்கு ரூ.8 ஆயிரத்து 452 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 12 சதவீதம் இது அதிகம் என்றாலும், மலைவாழ் மக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் முன்னேற்றத்துக்கும் இந்த நிதி போதுமானதாக இல்லை. 

பட்டியலின மற்றும் மலைவாழ் சமூகபெண் குழந்தைகள் உயர்நிலைக் கல்வி பெறுவதை உறுதிசெய்யும் வகையிலான ‘தேசிய பெண் குழந்தைகள் உயர்நிலை கல்வி ஊக்கத் திட்டம்’ இந்த பட்ஜெட்டில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். ஊரடங்கு காலத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விதிகளைத் தளர்த்தி, வனப்பகுதியில் சுரங்கம் உள்ளிட்ட தொழில்களுக்கான 11 திட்ட அனுமதியை இந்த அரசு வழங்கியுள்ளது. இதற்கு அந்த கிராம சபைகளின் ஒப்புதலையும் பெறவில்லை.

இப்படி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரப் பகுதிகளை சீரழிக்கும் முயற்சியை ஒருபுறம் செய்துவிட்டு, மலைவாழ் பகுதி இளைஞர்களின் தொழில் மேம்பாட்டுக்காக ரூ.50 கோடி மூல தன நிதி ஒதுக்கியும், மலைப்பகுதி உற்பத்தி பொருள்கள் விற்பனை மற்றும் பிறபகுதிகளுக்கு அவற்றை எடுத்துச் செல்லும் திட்டத்துக்காக ரூ.75 கோடி ஒதுக்கியும் இந்த அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள இந்த 2 திட்டங்களால் என்ன பயன் விளையும்?

பட்டியலின இளைஞர்களின் தொழில் மேம்பாட்டுக்காக 2017-18-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு ரூபாய் கூட ஒரு இளைஞர் கூட பயன்படுத்த முன்வரவில்லை. இந்த நிலையில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியையாவது அந்த இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்துவதை இந்த அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும். மலைப்பகுதிகளில் விளையும் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை மாநில அரசுகள் மற்றும் தனியார் முதலாளிகள் வசம் சென்றுவிட்ட பிறகு அவர்களால் எப்படி சுயசார்புள்ளவர்களாகத் தொடர முடியும்?

மேலும் ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே கலாசாரம், ஒரே நாடு ஒரே உணவு, ஒரே நாடு ஒரே தேர்தல் இதெல்லாம் தேவையில்லை. ஒரே நாடு ஒரே வாழ்க்கைத் தரம் இது தான் முக்கியம். அந்த வாழ்க்கைத் தரத்தை மலைவாழ் மக்களுக்கும் அளிக்க வேண்டும் என எம்.பி. கனிமொழி சோமு தெரிவித்தார்.