சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்!

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்! - Daily news

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 25-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதற்கிடையில் தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

"வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) அதி கனமழை 3 இடங்களிலும், கன முதல் மிக கனமழை 4 இடங்களிலும், 70 இடங்களில் கனமழையும் பெய்திருக்கிறது.

chennai rains

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 27-ந் தேதி (இன்று) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

28-ந் தேதி (நாளை) ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

29-ந் தேதி திங்கள்கிழமை அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 30-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பெய்த மழை, வரும் நாட்களில் பதிவாக உள்ள மழை மற்றும் பாதிப்புகளை கருத்தில்கொண்டு, கடலோர மாவட்டங்களுக்கு அடுத்து வர உள்ள 2 நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் (ரெட் அலர்ட்), அதை ஒட்டி யுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்படுகிறது.

chennai rain

இதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதி கனமழை (ரெட் அலர்ட்) அதாவது 20 செ.மீ வரை அல்லது அதற்கு மேல் மழை பெய்யும்.

குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு 27-ந் தேதி மீனவர்கள் செல்லவேண்டாம்.

29-ந் தேதி தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக அந்தமான் கடல்பகுதிகளில் சூறவாளிக்காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால் 29-ந் தேதி, 30-ந் தேதிகளில் அந்தமான் கடல்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

Leave a Comment