தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த  2 நாட்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் வானிலை நிலவரம் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் பேசுகையில், “குமரிக் கடல் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக உள்ளது. 

school holiday

அடுத்த 24 மணி நேரத்துக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை - காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழையும், பிற இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, தென்காசி ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும்; கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவையில் ஒரு சில இடங்களில் கனமழையும்; பிற மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்து வரும் 2 தினங்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், அதை ஒட்டிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.

school holiday

குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் செல்ல வேண்டாம்” இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார். 

அதிகனமழை எச்சரிக்கையை அடுத்து, தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி நாளை சனிக்கிழமை (27-11-2021) அன்று தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.