வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் குவிந்துள்ள விவசாயிகள் 9 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் இன்றுடன் 19 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த புரட்சிக்கு பொது மக்களிடையே நாளுக்கு நாள் ஆதரவு பெறுகி வருகிறது. 

விவசாயிகளுடன் இது வரை 5 கட்டங்களாக மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியும், அதில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் 6 ஆம் கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.

ஆனால், வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள 6 வது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அதற்கு முதல் நாள் இரவு உள் துறை அமைச்சர் அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதனால், செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய விவசாய சபையின் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா, “விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நடைபெறாது” என்று தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் தொடர்ந்து இன்றுடன் 19 வது நாளாக போராடி வருகின்றனர்.

அதே போல், “மற்ற மாநில விவசாயிகளும், டெல்லிக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்” என்றும், விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகப் பெரிய அளவில் திரண்டு வந்துகொண்டு இருப்பதால், டெல்லியில் உள்ள சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லை பகுதிகளில் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் தலைநகர் டெல்லி முற்றிலுமாக திணறி வருகிறது.

இந்நிலையில், போராட்டத்தின் அடுத்த கட்டமாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். இந்த உண்ணாவிரதம் விவசாயிகளின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக அமையும் என்றும் கூறப்படுகிறது. 

குறிப்பாக, போராட்டக்காரர்கள் நாமு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தையும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதத்தையும் நடத்துவார்கள் என்று விவசாய அமைப்புகள் அறிவித்து உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் காலை முதலே விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

அதன்படி டெல்லி எல்லைகளில் விவசாய அமைப்பு தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். இது தொடர்பாகப் பேசிய விவசாயிகள், 
“நாங்கள் அரசாங்கத்தை தட்டி எழுப்ப விரும்புகிறோம்” என்றும், தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், “விவசாயிகளின் ஒற்றுமையை உடைக்க மத்திய அரசு விரும்புகிறது” என்று, பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “விவசாயிகள் இன்னும் அதிக எண்ணிக்கையில் போராட்ட களத்திற்கு வருகிறார்கள் என்றும், 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும் எனவும், அவர் கூறினார். 

முக்கியமாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தானும் உண்ணாவிரதப் 
போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ள கருத்தில், “விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வேன். ஆம் ஆத்மி தொண்டர்களும் இதில் கலந்து கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் அளிக்க ஒரு மசோதாவைக் கொண்டு வர வேண்டும்” என்றும், கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

இதனிடையே, இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் புரட்சியில், “அதானி, அம்பானி தயாரிப்புகள் புறக்கணிக்க முடிவு” செய்துள்ளதாகவும், கடந்த வாரம் விவசாயிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.