“ஃபார்ச்சூனர் காருக்குள் பாலியல் வன்புணர்வு செய்ய முடியுமா?” என்று, ஆர்.டி.ஓவிடம் காவல் துறையினர் அறிக்கை கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர், “காருக்குள் நடைபெற்றதாகக் கூறப்படும் பாலியல் வன்புணர்வு வழக்கு” ஒன்றினை விசாரித்து வருகின்றனர். 

அந்த வழக்கில், “காருக்குள் வைத்து என்னை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்” என்று, பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளதால், இந்த வழக்கில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினரின் கருத்தை காவல் துறை அறிந்துகொள்ள விரும்பியது.

அதாவது, “குஜராத்தை மாநிலம் வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்த பவேஷ் குமார் என்கிற உள்ளூர் பிரமுகர் ஒருவர், அவருடைய காரில் வைத்து, என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று, அங்குள்ள காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார்.

அத்துடன், “கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி நள்ளிரவில் வைத்து, பவேஷ் குமார் அவருடைய ஃபார்ச்சூனர் காரில் என்னை வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்” என்று, அந்த பெண் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கடந்த 2 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பவேஷ் குமாரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர், அவரிடம் விசாரணை நடத்தி, அவரை சிறையில் அடைத்தனர்.

இந்த பாலியல் பலாத்கார வழக்கில், பவேஷ் குமார் மீதான குற்றத்தை நிரூபிப்பதற்காக வதோதரா வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திடம் அதன் கருத்தை அறிய விரும்பிய போலீசார். “ஃபார்ச்சூனர் காரில் பாலியல் வன்புணர்வு செய்ய போதுமான இடம் இருக்கிறதா? என்றும், காரினுடைய செண்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் குறித்தும் தொழில்நுட்ப ரீதியாக அறிக்கை அளிக்க வேண்டும்“ என்றும், கேட்டுக்கொண்டனர். 

மேலும், இந்த வழக்கில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையானது, காவல் துறையினரின் விசாரணைக்குப் பேருதவியாக இருக்கும் என்றும், போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன், “ 'ஃபார்ச்சூனர் காரில் பாலியல் வன்புணர்வு செய்ய போதுமான இடம் இருக்கிறதா?' என்ற கேள்வியை, போலீசார் எழுத்துப் பூர்வமாக அளித்து உள்ளதாகவும், இது போன்ற கேள்விகள் எங்களிடம் தற்போது தான் முதல் முறையாகக் கேட்கப்பட்டுள்ளதாகவும்” ஆர்.டி.ஓ அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அதே போல், “போலீசார் பெரும்பாலும், விபத்து வழக்குகளில் தான் வாகனத்தின் நிலைத்தன்மை குறித்து அறிக்கை கேட்பார்கள் என்றும், ஆனால் இது போல ஒரு வினோதமான கோரிக்கை போலீசாரிடம் இருந்து எங்களிடம் முதல் முறையாக வந்திருப்பதாகவும்” ஆர்.டி.ஓ அதிகாரிகள் கூறி உள்ளனர். 

இதனிடையே, “எஸ்.யூ.வி காருக்குள் பாலியல் வன்புணர்வு செய்ய போதுமான இடம் இருக்குமா? என வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திடம் அறிக்கை கேட்டு காவல் துறை அனுப்பியுள்ள கடிதம்” தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.