“கொரோனா தடுப்பூசி, கர்ப்பத்தைத் தடுப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை” என்று, நிபுணர்கள் ஆய்வின் மூலமாகத் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவுக்கு எதிராகப் போரில், இந்த உலகமே பெரும் இன்னல்களையும், இழப்புகளையும் சந்தித்தது. இதனையடுத்து, கொரோனா வைரசை தடுக்கும் 
வகையில், கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணியைக் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அதன் மூலம் நாட்டின் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

அவசரக்கால பயன்பாட்டிற்குக்காக்க கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சினை மத்திய அரசு அனுமதித்து இருக்கிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு ஒரு மையத்தில் தலா 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி தொடக்கத்தில் போடப்பட்டது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளதாகத் தகவல்கள் பரவியது. உடல் வலி, மயக்கம், அரிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது. இவர்களில் சிலர், சிறிது நேர மருத்துவ கண்காணிப்புக்குப் பிறகு வீடு திரும்பினார்கள். 

முக்கியமாக, டெல்லியின் தெற்கு  மாவட்டங்களில் தலா 11 பேருக்கும், மேற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி 6 பேரும், மத்திய டெல்லி 2 பேருக்கும் பக்க விளைவுகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அஞ்சி, தடுப்பூசியை மக்கள் தவிர்த்து வருகிறார்கள் என்றும், செய்திகள் வெளியானது.

அதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதும் கடந்த 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அத்துடன், கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்திப் போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. 

அதே நேரத்தில், “கொரோனா தடுப்பூசியானது, கர்ப்பத்தை தடுக்கும் என்ற தகவல்” பரவியது. ஆனால், இது முற்றிலும் தவறான தகவல் என்றும், இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை” என்றும், தற்போது தெரிய வந்துள்ளது.

“கொரோனா தடுப்பூசிகள் பெண்களைக் கர்ப்பம் அடையச் செய்வதில், அவர்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ தடையாக அமையும் என்பதற்கு உலகளவில் எந்தவொரு ஆய்வுத்தகவலும் இதுவரை இல்லை” என்று, நிபுணர்கள் உறுதியான தகவல்களைத் தெரிவித்து உள்ளனர். 

இது தொடர்பாகத் தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் காணொலி காட்சி வழியிலான கருத்தரங்கில் பேசும் போது, “தடுப்பூசியில் உள்ள ஆர்.என்.ஏ. பொருள், நஞ்சுக்கொடியில் உள்ள சின்சிட்டின்-1 என்ற புரதத்தைத் தாக்கும் என்ற அடிப்படையில் புரளிகள் பரவி வருவதாக” குறிப்பிட்டார்.  

“இந்த புரதமானது, கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தைப் போன்ற கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது என்றும், எனினும் இந்த 2 ம் வெவ்வேறு கட்டமைப்பைக் கொண்டு உள்ளன என்றும், அதனால் கர்ப்பத்துக்குத் தடையாகத் தடுப்பூசி இருக்காது” என்றும், தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறினார்.