“கடந்த 2019 - 2020 ஆம் நிதியாண்டில் பாஜக கட்சியின் வருமானம் 50 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும், ஆனால் தனி நபர் வருமானம் எவ்வளவு உயர்ந்து இருக்கிறது?” என்றும்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

“கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த வைத்த மொத்த சொத்துக்களை வேண்டப்பட்ட தொழில் அதிபர்களுக்குப் பிரதமர் பரிசாக அளிக்கிறார்” என்றும், ராகுல் மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அதாவது, “இந்தியாவின் கிரீடத்தில் உள்ள வைரங்கள் போன்ற தொழில்களைத் தனியாருக்குப் பிரதமர் மோடி விற்கிறார் என்றும், தேசிய சொத்துக்களைப் பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன” என்றும், மிக கடுமையாக ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார்.

“உணவு தானிய கிடங்குகளையும் தனியாருக்கு விற்க மோடி அரசு முடிவு செய்து உள்ளது என்றும், மத்திய அரசின் திட்டத்தால் ஏக போக வர்த்தகம் அதிகரிக்கும்” என்றும், அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

“காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யவில்லை என்று பிரதமர் குற்றம் சாட்டுகிறார் என்றும், காங்கிரஸ் உருவாக்கிய தேசிய சொத்துக்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது” என்றும், அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான், மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு, “இந்திய அரசியலில் நம்பகத்தன்மையை உறுதி செய்து தேர்தலில் பணம் ஆதிக்கம் செலுத்தப்படுவதைக் கண்காணித்து ஆண்டு தோறும் அறிக்கை” வெளியிட்டு வருகிறது.

அதன் படி, கடந்த நிதி ஆண்டில் அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்த வருமானம் மற்றும் தேர்தல் செலவினங்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், “பாஜகவின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 3,623 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்து இருப்பது” தெரியவந்து உள்ளது. 

இதில், பெரும்பாலானவை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாகக் கிடைத்து இருப்பதும் தெரிய வந்தது.

“இதன் மூலமாக, கடந்த 2019 - 2020 ஆம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 682 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து உள்ளது” என்பது, அதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த தொகையானது, இதற்கு முந்தைய ஆண்டை விட 46 சதவீதம் அதிகம் ஆகும். 

இந்த நிலையில் தான், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருவாய் 50 சதவீதம் உயர்ந்து உள்ளது” என்று, குறிப்பிட்டு பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். 

குறிப்பாக, “பாஜகவின் வருவாய் உயர்ந்தாலும், மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா?” என்றும், ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். ராகுல் காந்தியின் இந்த டிவிட், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.