“நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் மோடி விற்றுவிட்டதாக” காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பாஜக அரசு விற்றுவிட்டது” என்று, பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். 

“கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த வைத்த மொத்த சொத்துக்களை வேண்டப்பட்ட தொழில் அதிபர்களுக்கு பிரதமர் பரிசாக அளிக்கிறார்” என்றும், ராகுல் மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

“இந்தியாவின் கிரீடத்தில் உள்ள வைரங்கள் போன்ற தொழில்களை தனியாருக்கு பிரதமர் மோடி விற்கிறார் என்றும், தேசிய சொத்துக்களை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன” என்றும், மிக கடுமையாக விமர்சித்து உள்ளார். 

“உணவு தானிய கிடங்குகளையும் தனியாருக்கு விற்க மோடி அரசு முடிவு செய்து உள்ளது என்றும், மத்திய அரசின் திட்டத்தால் ஏக போக வர்த்தகம் அதிகரிக்கும்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யவில்லை என்று பிரதமர் குற்றம் சாட்டுகிறார் என்றும், காங்கிரஸ் உருவாக்கிய தேசிய சொத்துக்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது” என்றும், அவர் கூறியுள்ளார். 

“மத்திய அரசின் திட்டத்தால் 3 அல்லது 4 நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறும் என்றும், இளைஞர்களுக்கான அரசு வேலை வாய்ப்பு என்பதையே மத்திய அரசு ஒழிக்க பார்க்கிறது” என்றும், மிக கடுமையாக சாடி உள்ளார்.

அத்துடன், “2,3 பெரு நிறுவனங்கள் மட்டும் வளர்ச்சி அடைந்தால் சிறு, குறு தொழில் துறையே அழிந்து விடும் என்றும், இப்படியாக சிறு, குறு தொழில் துறை அழிவதால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பதே மிகப் பெரிய கேள்விக்குறியாகும் நிலை உருவாகி உள்ளது” என்றும், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை மோடி மீது தொடுத்து உள்ளார். 

மேலும், “குத்தகைக்கு விடுகிறோம் என்ற பெயரில் அரசின் சொத்துக்களை தாரைவார்க்கிறது மோடி அரசு” என்று, விமர்சித்து உள்ள ராகுல் காந்தி, “நீண்டகாலமாக நஷ்டத்தில் இருக்கும் தொழில்களை நாங்கள் தனியார்மயமாக்கினோம் என்றும், குறைந்த சந்தைப் பங்கைக் கொண்ட நிறுவனங்களை நாங்கள் தனியார்மயமாக்கினோம்” என்றும், குறிப்பிட்டு உள்ளார். 

“ஒரு குறிப்பிட்ட துறையில் தனியார் துறை ஏகபோகத்தை சரிபார்க்கும் திறனுடன் நாங்கள் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கவில்லை” என்று விளக்கம் அளித்து உள்ள ராகுல், “நாங்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிரானவர்கள் அல்ல” என்றும், தெளிவுப்படுத்தி உள்ளார். 

“ஆனால், எங்கள் தனியார்மயமாக்கல் திட்டத்தில் ஒரு தர்க்கம் இருந்தது என்றும், நாங்கள் மூலோபாயத் தொழில்களைத் தனியார்மயமாக்கவில்லை என்றும், ரயில்வே துறையின் மூலோபாயத் தொழிலாக நாங்கள் கருதுகிறோம்” என்றும் அவர் தெரிவித்து உள்ளார். 

“அதற்கு காரணம், அது லட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான மக்களைக் கொண்டு செல்கிறது என்றும், நாட்டின் பல லட்சம் பேரை வேலைக்கு அமர்த்துகிறது” என்றும், ராகுல் காந்தி விளக்கத்துடன், மோடி அரசை மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

குறிப்பாக, “மத்திய அரசின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது இளைஞர்களின் கடமை” என்றும், ராகுல் காந்தி விளக்கம் அளித்து உள்ளார்.