கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி, இந்தியாவில் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனப் பின்னணியைக் கொண்ட 59 செல்போன் செயலிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், `இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, நாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த 59 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது' எனக்கூறப்பட்டிருந்தது.

இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, இந்திய செல்போன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சமீபத்தில் சீனா போர் செய்ய முயன்றதே, இவை அனைத்துக்குமே காரணம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், இது அரசியல் ரீதியான முடிவில்லை என்றும், தொழில்நுட்ப சிக்கல் காரணமாகத்தான் செய்யப்பட்டது என்றும் விளக்கம் கூறினார் இந்திய அதிகாரிகள்.  

இந்தியாவின் இந்த நடவடிக்கையைப் பார்த்த பிற நாடுகள், தாங்களும் இதைப் பின்தொடரலாம் என முடிவு செய்துள்ளனர். அந்த வரிசையில், ஆஸ்திரேலியாவில் சீன செயலிகள் தடை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது,அமெரிக்காவும் சீன செயலிகளைத் தடுக்கவிருப்பதாகக் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

சீன செயலிகளை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா தான் முதல் நாடு. அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது அமெரிக்காதான்.

 

அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பாம்பியோ, இதை தனது பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். தங்களின் அதிகாரிகளோடு கலந்தாலோசித்த பின், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த கருத்தைத் தெரிவிப்பார் எனக்கூறியிருக்கிறார் மைக்.

ட்ரம்ப், கொரோனா வைரஸ் பரவுதல் விஷயத்தில், ஏற்கெனவே சீனா மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தது, அனைவரும் அறிந்த விஷயம். சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் சேர்ந்துதான் கொரோனா பற்றிய விவரங்களை மறைத்துவிட்டதாகவும், அதனால்தான் இன்று அமெரிக்கா இவ்வளவு மோசமான பாதிப்புகளை சந்திப்பதாகவும் கூறியிருந்தார் ட்ரம்ப். இதை அடிப்படையாக சொல்லி, அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்துக்கு தரும் நிதியையே நிறுத்தியவர் ட்ரம்ப். அந்த அளவுக்கு சீனாவுடன் முரண்பட்டிருக்கும் ட்ரம்ப், இந்த செயலிகள் விஷயத்திலும் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக்கூடும் என கணிக்கிறார்கள் சிலர்.

செயலிகள் வழியாக இப்படி நாடுகளும் நாடுகளும் மோதிக் கொள்வது, சற்றே வேடிக்கையாக தெரிந்தாலும், இந்த மாதிரியான நடவடிக்கைகள் யாவும் எந்தவொரு நாட்டையும் பாதிக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை. அனைத்துமே தனியார் நிறுவனங்களையே பாதிக்கும் என்பதுதான் நிதர்சனம். 

அமெரிக்காவின் முடிவை, பொறுத்திருந்து பார்ப்போம்!

- பெ.மதலை ஆரோன்