லாக்டௌன் காலத்தில், பல்வேறு தரப்பினரும் தங்களுக்கு ஏற்பட்டு வரும் மனநல பிரச்னைகள், பொருளாதார சிக்கல்கள், உடல்நல குறைபாடுகள் குறித்து பொது வெளிகளில் பேசி வருகிறார்கள். லாக்டௌனை ஆரோக்கியமாக எதிர்க்கொள்ள முடியாமல் திணறுபவர்கள் குறித்தும் அன்றாடம் செய்திகள் பார்த்து வருகிறோம். இதற்கிடையில், இந்த லாக்டௌன், இந்தியாவில் பல லட்ச கருக்கலைப்புகளை தடுத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை ஐபாஸ் மேம்பாட்டு நிறுவனம் (Ipas Development Foundation) என்ற நிறுவனம் எடுத்து நடத்தியுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி, இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் மார்ச் 25 முதல் ஜூன் 24 வரையிலான மூன்று மாத காலகத்தில், இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவின் கணக்கீட்டின்படி, மூன்று மாதத்தில் இங்கு 39 லட்சம் கருக்கலைப்புகள் நடந்திருக்க வேண்டும். 'தி லான்செட்' மருத்துவ இதழ் 2015-ம் ஆண்டு ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டிருந்தது. இந்தக் கருக்கலைப்புகளில் 73% மருந்து, மாத்திரைகள் கொண்டும், 16% தனியார் மருத்துவமனைகளிலும், 6% பொதுமருத்துவனைகளிலும், 5% பாதுகாப்பற்ற முறைகளிலும் நடைபெறுவதாகவும் இவ்விதழ் தெரிவித்திருந்தது. ஆனால், லாக்டௌனால் அதில் 18.5 லட்சம் கருக்கலைப்புகள் தடைபட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இவ்வளவு கருக்கலைப்புகள் தடுக்கப்பட்டதன் பின்னணியை அறிய ஐபாஸ் அந்நிறுவனம், துறை சார்ந்தவர்களுடன் தொலைபேசியில் கேட்டிருக்கிறார்கள். அதற்கு வல்லுநர்கள், `18,50,000 ஆயிரம் பெண்களில் 80% பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாமல் போனதற்கு லாக்டௌனில் திறக்கப்படாத மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களே காரணம்' எனக்கூறப்பட்டிருந்திருக்கிறது.

இது ஒருபக்கம் பாசிட்டிவ்வாக பார்க்கப்பட்டாலும், மற்றொருபக்கம் இதன் நெகடிவ் பக்கமும் இருக்கிறதென்கிறார்கள் ஐபாஸ் நிறுவனத்தினர். அது, தற்போது, லாக்டௌன் காரணமாக, பல பெண்கள் விரும்பாத கர்ப்பத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படியான விரும்பாத கர்ப்பம், பாதுகாப்பற்ற முறையில் அவர்களை கருக்கலைப்பில் ஈடுபடுத்தவும், அல்லது மனஅழுத்தம் மிகுந்த கர்ப்பகாலத்தையும் அவர்களுக்குத் தரவும் வாய்ப்புள்ளது. இவையாவும் அவர்களுக்கு மேலும் மேலும் சிக்கலை உண்டாக்கும் ஆபத்து உள்ளதென சொல்லப்படுகிறது. 

அதனால், லாக்டௌனிலும் கருக்கலைப்புக்குத் தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வது அவசியமாகிறது என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

முதல் ட்ரைமெஸ்டரில் கருக்கலைப்புக்கான வாய்ப்புகள் தடைபட்ட இந்தப் பெண்கள், லாக்டௌன் தளர்வானால் தங்கள் இரண்டாம் ட்ரைமெஸ்டரில் அதற்கான வாய்ப்புகள் தேடி மருத்துவமனையை நாடலாம். அப்போது அவர்களுக்கு அதிக கவனத்துடன் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும்.

தேசிய சுகாதார புள்ளிவிவரத்தின்படி, தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 65,000 கருக்கலைப்புகள் நடக்கின்றன எனக் கணிக்கப்பட்டது. `கட்மேச்செர்’ என்ற ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 2015-ம் ஆண்டில் மட்டும் 7 லட்சத்துக்கும் அதிகமான கருக்கலைப்புகள் தமிழகத்தில் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. எனில், ஒவ்வொரு வருடமும் தோராயமாக 10 சதவிகித கருக்கலைப்புகள்தான் அரசிடம் பதிவு செய்யப்படுகின்றன. 90 சதவிகிதக் கருக்கலைப்புகள் தனியார் மருத்துவமனைகள், தரகர்கள், அல்லது முறைசாரா நபர்களிடம் முறையற்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆகவே அரசு பாதுகாப்பான கருக்கலைப்புக்கான வழியை, மக்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டியது அவசியம்.

தமிழக மாவட்டங்களில் 16 சதவிகிதத்தினர் மட்டுமே கருக்கலைப்பை அரசு மையங்களில் செய்கிறார்கள். அதில் 3.5 சதவிகிதம் பேர் தகுதியில்லாத நபர்கள் அல்லது போலி மருத்துவர்களையும், 84 சதவிகிதம் பேர் தனியார் அமைப்புகளையும் நாடுகின்றனர். அரசு மையங்களுக்குச் செல்லாததற்கு, `சம்பந்தப்பட்ட பெண்ணின் கர்ப்பம் குறித்த ரகசியங்கள் முறையாகக் காக்கப்படுவதில்லை’ என்கிற குற்றச்சாட்டை பலரும் முன்வைக்கின்றனர். குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பு தொடர்பான ரகசியங்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தனியார் நிறுவனங்களையே அதிகம் நம்புகின்றனர். திருமணமான பெண்களில் சிலரும்கூட, `பாதுகாப்பான மற்றும் முறையான சிகிச்சைகள் தனியார் மருத்துவமனையில்தான் கிடைக்கின்றது’ என்றே தெரிவிக்கின்றனர்.

நிலைமை அப்படியிருக்க, பாதுகாப்பான வழியை அரசு ஏற்படுத்திக் கொடுக்க தவறினால் விளைவுகள் மோசமாகும். பாதுகாப்பான கருக்கலைப்பென்பது, சம்பந்தப்பட்ட பெண்ணின் உயிருக்கும் கேடு என்பதால், அரசும் சுகாதாரத்துறையும் கவனத்தோடு இருக்க வேண்டியது கட்டாயம்.

- ஜெ.நிவேதா.