கோவிட் - 19 கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவத்தொடங்கிய வைரஸ் என்பது, நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். 2019 டிசம்பர் பாதியில் இருந்தே அங்கு கொரோனா பரவத்தொடங்கியதாகவும், சீனா அதை மறைத்துவிட்டதால்தான் இன்று உலகம் இவ்வளவு மோசமான பாதிப்பை சந்தித்து வருவதாகவும் சொல்லி, கடந்த சில மாதங்களாகவே பல நாடுகளும் சீனா மீது குற்றச்சாட்டு வைத்தது. 
 
அந்த நாடுகளில், அமெரிக்கா முக்கியமானது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவை மட்டுமன்றி, உலக சுகாதார நிறுவணத்தையும் சேர்த்தே குற்றம் சொல்லி வருகிறார். ட்ரம்ப் சொல்லும்போது, ``உலக சுகாதார நிறுவணத்துக்கு கொரோனா விஷயம் ஏற்கெனவே தெரியும். அவர்களும், சீன அரசோடு சேர்ந்துக்கொண்டு விஷயத்தை மூடிமறைத்துவிட்டார்கள்" என்று கூறியிருந்தார். இதை முன்னிறுத்து, உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதி தருவதைக்கூட நிறுத்தி சர்ச்சையை கிளப்பினார் ட்ரம்ப்.

இதற்கிடையில், கோவிட் - 19 சீனாவிலிருந்துதான் கிளம்பியதா என்ற சர்ச்சையும் இடையில் எழுந்தது. ஹைதராபாத்தில் அமைந்துள்ள செல்லுலார் மற்றும் நுண்ணுயிரிகளுக்கான ஆய்வு மையம் (CCMB), டெல்லியில் அமைந்துள்ள ஜெனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம்(CSIR-IGIB) மற்றும் காசியாபாத்தில் அமைந்துள்ள அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றில், நவம்பர் 2019 க்கு முன்னரே இந்தியாவில் கோவிட் - 19 கொரோனா வைரஸின் தாக்கம் இருந்ததாக கூறப்பட்டது. உலகின் பல நாடுகளிலும், நவம்பரில் இப்படி பாதிப்பு இருப்பது சில ஆய்வுகள் தெரியவந்துள்ளது. இருப்பினும், சீனாதான் மோசமான ஸ்ட்ரெய்ன் கொண்ட வைரஸின் தொடக்கமாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஆகவே, மீண்டும் சீனாவும் உலக சுகாதார நிறுவனமும்தான் ஒன்றுகூடி விஷயத்தை மறைத்ததற்காக குற்றம் சாட்டப்படுகிறது.

இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பினர், ``இந்த வைரஸை முதலில் சீன மருத்துவர்கள் இது ஒரு வைரஸ் நிமோனியா என்று நினைத்தார்கள். அதனால் சாதாரண மருந்துகளால் தரப்பட்டது. பின்னர், 2019 டிசம்பரில், இது சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து கொரியா மற்றும் தாய்லாந்து வரை பரவியது" என்று கூறிவந்தனர். அப்படி பார்த்தாலும் டிசம்பரிலேயே ஓரளவுக்கு பிரச்னை தெரியவந்துவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. 

சீனாவின் தென் பகுதியான வூகானை சேர்ந்தவர்கள், இந்தப் புதிய வைரஸ் ஏதோவொரு விலங்கிடமிருந்துதான் பரவுகிறது என முடிவு செய்துவிட்டனர். அவர்கள் அதனை, சீன அரசுக்கு தெரிவிக்கவும் செய்தனர். இதை கேட்ட சீன அரசு, முதலில் கொஞ்சம் காலம் கடத்தியது. பின்னர் முதற்கட்ட நடவடிக்கையாகக் கடலுக்கு அருகில் இருக்கும் சந்தைகள், மொத்த வணிகம் மேற்கொள்ளும் இடங்கள் போன்றவற்றை 'செயல்பட வேண்டாம்' என அறிவுறுத்தினர். பிரச்னை என்னவெனில், `பதற்றத்தைக் கிளப்ப வேண்டாம்' என்று நினைத்த அரசு, `பாதிப்பு பரவும் அபாயம் இருப்பதால்தான் சந்தைகளை செயல்பட வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்' என்ற அடிப்படை காரணத்தைக்கூட தனது மக்களுக்கு அந்த சமயத்தில் சொல்லி எச்சரிக்காமல் இருந்துது. அதனால், ஏற்கெனவே நோய்ப் பாதித்திருந்தவர்கள் அலட்சியத்தோடு இருந்து, நோயை வேகமாக பரப்பி பிரச்னையை தீவிரமடைய செய்தனர். ஆனாலும், அப்போத்உம் சீன அரசு விஷயத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனாலேயே, உலக சுகாதார நிறுவனமும், பிரச்னையை கையில் எடுக்கவில்லை.

இதற்கிடையில், தொடர் ஆராய்ச்சிக்குப் பின், ஜனவரி மாதம் 20-ம் தேதியன்று, `இது புது (ஆங்கிலத்தில் `நாவல்') வகை கொரோனா வைரஸ்' என அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். அவர்கள் அறிவிக்கும்போது, ஒரே நேரத்தில் 282 பேர் நோயாளிகளாக உறுதிசெய்யப்பட்டிருந்தார்கள். நவம்பரில் தொடங்கிய பாதிப்பு குறித்த அறிவிப்பை, ஜனவரி இறுதிவரை அவர்கள் இழுத்ததுதான், இன்று உலகமே ஸ்தம்பித்து போயிருக்கக்காரணம் என்கிறார்கள் சில மருத்துவர்கள்.

அதிலொரு மருத்துவர், ``உலக சுகாதார நிறுவனம், இறுதிவரையில் `இது சீனாவின் பிரச்னை, சீனா சரிசெய்துகொள்ளும்' என்ற நினைப்பிலேயே இருந்துவிட்டு, தங்களின் செயல்பாடுகளில் தாமதம் காட்டியது" என்று கூறியிருந்தார். அதனால்தான் பிரச்னை தீவிரமான பின்னரும்கூட, ``இது ஒரு தொற்று வியாதி' என அறிவிப்பதிலும் தாமதம்காட்டினர் அவர்கள்" என கூறினார் அந்த மருத்துவர்! 

மேலும், `உலக மருத்துவ அவசர நிலை' என அறிவிப்பதிலும் தாமதம் இருந்துள்ளது. சொல்லப்போனால், மூன்று கட்ட மீட்டிங் வைத்து, மூன்று வாரங்கள் கழித்து, `உலக மருத்துவ அவசர நிலை' என அறிவித்தார்கள் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள். காரணம், இந்த அறிவிப்பு வெளியானால், உலக சந்தையில் பொருளாதார சிக்கல்களை சீனா சந்திக்கக்கூடும் என்ற அவர்களின் எண்ணமாக இருக்கலாம் என கணிக்கிறார்கள் சிலர். அது உண்மையெனில், இந்தத் தாமதத்தின் விலை, அப்பாவி மனித உயிர்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பினர், ``சீனாவுடன் எங்களுக்கு தனிப்பட்ட உறவு எதுவும் இல்லை. சொல்லப்போனால், அவர்கள் எங்களுக்கு தகவலே தெரிவிக்கவில்லை. நாங்களாக முன் சென்றுதான் பிரச்னையை கையில் எடுத்தோம். ஆம், சீனாவிலுள்ள எங்கள் அமைப்பினர்தான் சுயமாக களத்துக்கு சென்று விவரங்களை சேகரித்து எங்களுக்கு அலெர்ட் செய்து, நாங்கள் அதுபற்றி ஆய்வு செய்யத்தொடங்கினோம். நாங்களாவே கையில் எடுத்ததால்தான், தாமதம் ஆகிவிட்டது. ஒருவேளை அவர்கள் முன்னரே ஒத்துழைத்திருந்தால், முன்னரே எங்களுக்கு அனைத்தும் தெரியவந்திருக்கும். நாங்களும் துரிதமாகியிருப்போம்" எனக்கூறியுள்ளனர்.

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி, இங்கு ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இருக்கின்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும், இங்கு 22,000 - க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தியா, இதுவரை ஏறத்தாழ 16 ஆயிரம் உயிர்களை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ளது. உலகளவில் 5 லட்சம் பேர் கோவிட் - 19 கொரோனாவால் இறந்தும் உள்ளனர்.

இப்படியான நேரத்தில் நோய் தீவிரத்துக்கு சீனாவின் தாமதம்தான் காரணம் என உலக சுகாதார நிறுவனம் சொல்லியிருப்பதை, மிகமுக்கியமான பேசு பொருளாக ஆகியிருக்கிறது. இருப்பினும் ஒருவரையொருவர் குறைசொல்லிக்கொள்வதை விடவும், கொரோனா தற்காப்பு மற்றும் தடுப்பு குறித்த விஷயங்களை பகிர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமுமாக இருக்கிறது. இந்த குறை சொல்லுதலை தவிர்க்கும் பொறுப்பு, உலக சுகாதார நிறுவனத்துக்கும் பொருந்தும்.

- ஜெ.நிவேதா.