கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திருந்த யானைக்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழக்கை யாரோ கொடுக்க, அதை மென்று தின்றபோது, வெடி வெடித்ததில் யானையின் தாடைப்பகுதி, பற்கள் உடைந்து சேதமடைந்தன.

வலியுடன் சுற்றுத்திரிந்த யானை வெள்ளியாறு ஆற்றில் நின்றநிலையில் கடந்த 27-ம் தேதி உயிரிழந்தது. பெண் யானையை வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்தபோது அந்த யானை ஒரு மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. 
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்கேரள அரசிடம் இதற்கு விளக்கம் கேட்டுள்ளது. 

 “ வேளாண் பயிர்களை சேதம் செய்கிறது என்று விவசாயிகள் யாராவது  அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்து யானையைக் கொன்றிருக்கலாம்" என்கிறார்கள் வனத்துறையினர். தற்போது யானையை கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

விவசாய நிலத்துக்குள் யானை வந்தால், வெடி வைத்து கொல்லும் நிலைக்கு மனித சமுதாயம் சென்றுவிட்டது. யானைகள் விவசாய நிலத்துக்கு வருவதும், அதை துன்புறுத்தி அனுப்புவதும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. யானை வாழ்விடம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. அதன் வாழ்விடம் கான்கிரீட் காடுகளாக மாறியது, யானையின் குற்றமா. 

விலங்குகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்புக்கே மனித இனம் எதிராக செயல்படுகிறது. இயற்கையின் எதிரி மனிதன் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பிரதிபலித்து வருகின்றன. 

தற்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரொனாவால், பல நாடுகள் ஊரடங்கை பிறப்பித்தன. ஒட்டுமொத்த மனித இனமும் வீட்டுக்குள் முடங்கிய நேரத்தில், இயற்கை நிம்மதியாக இருப்பதாக பல மீம்ஸ்கள் வந்தன. மரங்கள் செழிப்பாகவும், மாசு இல்லா நகரங்களும், வன விலங்குகள் நிம்மதியாக இருப்பதாக பல மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கும் வந்திருக்கும். 

அதற்காக வளர்ச்சிக்கு தடை வேண்டும் என யாரும் சொல்லவில்லை. இயற்கையின் எக்கோசிஸ்டம் பாதிக்காத வகையில், எல்லாம் மாற்றி கட்டமைக்கப்பட வேண்டும். 


1980-ம் ஆண்டு தேசிய வனப்பாதுகாப்புச் சட்டத்தின்படி, "தவிர்க்கமுடியாத தேவைகளன்றி வேறு எதற்காகவும் பல்லுயிரியச் சூழல் நிறைந்த காடுகளை அழிக்கக்கூடாது. அப்படி அழிக்கப்படும் காடுகளுக்குச் சமமாக அதை அழிப்பவர்கள் வேறு ஏதேனும் பகுதியில் அதே அளவு காட்டினை உருவாக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது. ஆனால் காடுகளை அழிக்கும் யாராவது, அதற்கு பாதி அளவாவது மரங்களை நட்டு பாதுகாத்து வருகிறார்களா.

பரிணாம வளர்ச்சியை, வெறுமனே நம்முடைய சுயலாபத்திற்காகச் சீரழித்துவிட்டது மனித இனம். 

சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை யாரும் மறந்துவிட முடியாது. தீயில் கருகிய வன உயிரினங்களின் புகைப்படம் எல்லோரது மனசாட்சியையும் நிச்சயம் தட்டியிருக்கும். 
ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 50 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாக,  சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கிறிஸ் டிக்மேன் வெளியிட்ட தகவல் அதர்ச்சியை ஏற்படுத்தியது. 

2018-ல் கலிஃபோர்னியா காட்டுத்தீயில்  800,000 ஹெக்டேர் காடு நெருப்புக்கு இரையானது. பிரேசிலில் அமேசான் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ,  மூன்று மில்லியன் ஹெக்டேர் வனத்தை அழித்தது. ஆஸ்திரேலிய காட்டுத்தீ ஆறு மில்லியன் ஹெக்டேர் காட்டு நிலத்தை எரித்திருக்கிறது. 

இழந்த வனப்பரப்பை மீண்டும் உருவாக்க குறைந்தபட்சம் 100 வருடங்கள் தேவைப்படும் என்கிறார்கள் அறிஞர்கள். .

காடுத்தீயால் வெப்பநிலையை அதிகரித்து,  கரிமவாயு வெளியேறி,  பூமியின் தட்பவெப்பநிலையை மாற்றி அமைக்கிறது. தட்பவெட்ப நிலை மாறும்போது, ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்படும். காடுகள் தீக்கிரையாவதன்  பின்னணியில் மனிதனனின் கேவலமான முகம் மறைந்து கொண்டிருப்பது மறுக்கப்முடியாதது.. மறைக்க முடியாதது. 


1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக  அறிவித்தது ஐக்கிய நாடு சபை. 
2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக 'பல்லுயிர்ப் பெருக்கத்தை'  அறிவித்துள்ளது.
"பல்லுயிர்ப் பெருக்கம் என்பது அவசரமானது மட்டுமின்றி நமது இருத்தலியலுக்கான நெருக்கடியும் கூட. சமீப காலமாக, பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை புரட்டிப்போட்ட காட்டுத்தீ, ஆப்பிரிக்காவை அச்சுறுத்திய வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் தற்போது உலகையே உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் என நாம் பல்வேறு அபாயங்களை சந்தித்து வருகிறோம். இவையனைத்தும் மனிதர்கள் மற்றும் வாழ்வின் வலைகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை நிரூபிக்கிறது" என்கிறது ஐ.நா சபை. 

உண்மைதான். மனிதனும் இயற்கையும் ஒன்றுக்கொன்று சார்ந்ததுதான். இயற்கையை அழித்து,  மனிதன் வளர்ச்சிகண்டால் அழிவது மனித இனம்தான். இனியாவது இயற்கையோடு இணைந்து இருப்போம்.

ஆக்கமும் , எழுத்தும்  : லோகேஸ்வரி