மலேசியாவில் 2 மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 200 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து உள்ளனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனஸ் இரட்டை கோபுர சுரங்கப் பாதை வழியாக, காலிப் பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த மெட்ரோ ரயில், அதே வழித்தடத்தில் 213 பயணிகளுடன் வந்த மற்றொரு ரயில் மீது திடீரென்று மோதி விபத்துக்கு உள்ளானது. 

இந்த விபத்தில் கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், இந்த விபத்தில் 47 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 166 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரயில் விபத்து குறித்து அங்கு விரைந்து போலீசார் மற்றும் மீட்பு படையினர், படுகாயம் அடைந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமான விசாரணை நடந்து வருகின்றனர்.

இந்த விசாரணையில், “ரயில் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வந்த தவறான தகவல் தொடர்பு காரணமாகவே, இந்த பெரும் விபத்து நேர்ந்திருக்கலாம்” என்றும், போலீசார் சந்தேகிப்பதாகவும் அந்நாட்டுக் காவல் துறை அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

“இந்த ரயில் விபத்தானது, மெட்ரோ அமைப்பின் 23 ஆண்டு கால செயல்பாட்டில் ஏற்பட்ட முதல் பெரிய விபத்து” என்றும், அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் வீகா சியோங் தெரிவித்து உள்ளார். 

அத்துடன், இந்த ரயில் விபத்துக்கான முழுமையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டு உள்ளார். இதனால், இந்த ரயில் விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், மலேசியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.