இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த கலைஞரான நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவே இருந்திருக்கிறார். அவர் நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால் அரசியலிலும் காலடி எடுத்து வைத்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். 

மக்கள் நீதி மய்ய கட்சியில் நிறைய படித்தவர்கள், நீதிபதிகள், முன்னாள் ஐபிஎஸ் ஐஎப்எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் என நன்கு படித்தவர்களை கட்சிகளில் முன்நிறுத்தி கட்சியை வழி நடத்தி வந்தார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன். கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மையம் முதல் தேர்தலிலேயே கிட்டத்தட்ட 5% வாக்குகளுக்கு மேல் பெற்று மக்களின் கவனத்தைத் ஈர்த்தது. 

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் முன் நிறுத்தப்பட்டு மக்கள் நீதி மையம் கட்சி தமிழகத் தேர்தலில் களம் இறங்கியது. பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்த சட்டமன்றத் தேர்தலில் நல்ல வாக்குகளை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கடைசியில் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறாமல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனின் தோல்வி அடைந்தார்.

இதனிடையே கடந்த சில தினங்களாக மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு விடுத்தனர். ஒவ்வொருவரும் கட்சியிலிருந்து விலகி கட்சியின் மீதும் கமல்ஹாசன் மீது பல குற்றச்சாட்டுகளை விடுத்தனர். மருத்துவர் மகேந்திரன் வெளியானபோது அவர்  வெளியேறியது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் கமல்ஹாசன். அதன்பிறகு வெளியேறிய மற்ற முக்கிய பொறுப்பாளர்கள் யாரையும் பற்றி  பெரிய அளவில் கட்சியின் சார்பில் இருந்து எந்த அறிக்கையும் நிலைப்பாடும் வெளியில் வரவில்லை. 

இந்த நிலையில் கட்சியின் இந்த நிலையை குறித்து கமல்ஹாசன் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த தோல்வியை எப்படி கையாள்வது ,விலகியவர்களை பற்றிய நிலைப்பாடு குறித்து விளக்கமாக பதில் அளித்துள்ளார். இதுவரை பல முக்கிய  பொறுப்பாளர்களும் பிரமுகர்களும் காட்சியிலிருந்து விலகியது குறித்து  பெரிதும் பேசாத நடிகர் கமல்ஹாசன் தற்போது வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.