நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், பல்வேறு பிரபலங்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். 

இந்தியாவில் சமீபகாலமாகத் தனிப்பட்ட ஒருவரை விமர்சிக்க அவர்களின் குடும்பங்களை இழுத்து மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகின்றன. 

சமூக வலைத்தளங்களில் போலிக்கணக்குகளைத் தொடங்கியவர்கள், தனக்குப் பிடிக்காதவர்களின் கருத்துகளுக்கு எதிர்க் கருத்து கூறுவதாக நினைத்து ஆபாசமாகவும், அதனைப் படிப்பவர்கள் முகம் சுழிக்கும் வகையிலும் பொது வெளியில் கருத்துகளைப் பதிவு செய்து வருவது அருவருக்கத் தக்க ஒரு விசயமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த வாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக, “அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்து விடுவேன்” என்று ஒருவர் டிவிட்டரில் மிரட்டல் விடுத்தார். 

தோனி மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பாலியல் ரீதியான மிரட்டல் விடுக்கப்பட்டது. அவரது மனைவி சாக்ஷியின் இன்ஸ்டகிராம் பக்கத்திலும் மிரட்டல்கள் தொடர்ந்தன. இதையடுத்து, மிரட்டல் விடுத்த 12 ஆம் வகுப்பு சிறுவனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது, அதே போன்று மீண்டும் ஒரு சம்பவம் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது. 

அதாவது, நடிகர் விஜய் சேதுபதி, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான “800” படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்குத் தமிழ் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இது குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து எதுவும் தெரிவிக்காமல் தவிர்த்து வந்தார். ஆனால், இறுதியாக அப்படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகி உள்ளார்.

இந்நிலையில் தான், நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு டிவிட்டரில் ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், அறுவறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

அதன்படி, டிவிட்டரில் ரித்திக் என்ற பெயர் கொண்ட அந்த நபர் இந்த மிரட்டலை விடுத்து உள்ளார். இதற்கு பல்வேறு பிரபலங்கள், நெட்டிசன்கள் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியின் மகள் குறித்து மிகவும் வக்கிரமாக டிவிட்டரில் விமர்சனம் செய்த ரித்திக் என்பவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் தற்போது தங்களது விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதனையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ரித்திக் என்ற பெயர் கொண்ட அந்த நபர் தொடர்பான அனைத்து விபரங்களையும் போலீசார் தற்போது சேகரித்து வருகின்றனர். அதன்படி, அந்த நபர் இன்றுக்குள் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, “விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது” என்று, திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளார். 

“விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல, மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவது தான் கோழைகளுக்குத் தெரிந்த ஒரே ஆயுதம். இதைச் செய்த நபர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து டிவீட் செய்துள்ள தர்மபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் செந்தில் குமார், “மனிதர்களா இவர்கள்?, இது போன்று வன்மங்களைக் கக்கும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில், “கருத்து வேறுபாட்டைத் தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கு சப்போர்ட்டா நிக்கிறாங்க இந்த ஊர்ல. இதை யாரும் மாற்றப்போவதில்லை. ஒரு குழந்தையை பாலியல் செய்வது பற்றி பொதுவில் சொல்லக்கூடிய இந்த நபர் ஒரு குற்றவாளி. இவ்வாறு பேசக்கூடிய ஆண்கள் எவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள். எப்படி ஒரு 
பெண்ணுக்கு பாலியல் ரீதியாக ஆண்களால் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதைப்பார்த்து மவுனமாக இருப்பது வெட்கக்கேடான விஷயம்” என்றும் பகிரங்கமாக விமர்சித்து உள்ளார்.