“நடிகைகள் ராகினி, சஞ்சனாவுக்கு ஜாமீன் வழங்காவிட்டால் குண்டு வெடிக்கும்” என்று, நீதிபதிக்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

போதைப் பொருள்கள் பயன்படுத்தி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பெங்களூரைச் சேர்ந்த நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரையும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் அடுத்தடுத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் நடிகைகள் இருவரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அங்கிருந்த படியே நடிகைகள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்படி நடைபெற்று வரும் விசாரணையில், நடிகைகள் இருவரும் போதைப் பொருள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. அத்துடன், சட்ட விரோதமாகச் சொத்து சேர்த்தது தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக சிறைக்குச் சென்று நடிகைகள் ராகிணி, சஞ்சனாவிடம் 5 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி பலவிதமான தகவல்களையும் பெற்றதாகக் கூறப்படுகிறது. 

மேலும், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நடிகைகள் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, மோதிக் கொண்டுள்ள சம்பவம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், “நடிகைகள் ராகினி, சஞ்சனாவுக்கு ஜாமீன் வழங்காவிட்டால் குண்டு வெடிக்கும்” என்று, நீதிபதிக்கு வந்த மிரட்டல் கடிதத்தால் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அதாவது, போதை பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் வேண்டி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன. 

இந்த வழக்கில் இரு நடிகைகளின் ஜாமீன் மனுக்களைப் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சீனப்பா விசாரித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று மாலை திடீரென நீதிமன்ற வளாகத்தில் பார்சல் ஒன்று நீதிபதிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதைப் பிரித்துப் பார்த்த போது, கடிதம் மற்றும் வெடிகுண்டு பொருள்களும் இருந்து உள்ளது. அந்த கடிதத்தில், “போதைப்பொருள் வழக்கில் நடிகைகளுக்கு ஜாமீன் வழங்கும்படியும், பெங்களூரு டிஜே ஹல்லி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் குண்டு வெடிக்கும்” என்றும், இதில் எச்சரிக்கப்பட்டு இருந்தது.
 
இந்த கடிதத்தையும், பார்சலையும் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த நீதிபதி சீனப்பா, உடனடியாக இது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். 

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என்று மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார். “இந்த கடிதம் எழுதி பார்சல் அனுப்பியவர் யார்?” என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.