மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. எனினும் இந்த குழுவின் பரிந்துரைகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துமாறும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

ஆனால் இந்த இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தக்கோரி தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. முன்னதாக, இந்த வழக்கில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு சாத்தியங்கள் இல்லை என்று தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வந்தது. இன்றைய தீர்ப்பில், ‘நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு உத்தரவிட முடியாது. 27% இடஒதுக்கீடையும் வழங்க உத்தரவிட முடியாது’ என்று குறிப்பிட்டனர். அதன்மூலம், இந்த ஆண்டு இதர பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு கிடைக்கப்பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்புக்கு, வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 

``மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு ஆகும். 

இந்தப் பிரச்சினையில். மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சகப் போக்கை மேற்கொண்டு வந்ததற்கு, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று கூறியிருக்கிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மருத்துவ படிப்புகளில் 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் வழங்க மறுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. பாஜகவுடன் அதிமுக கைகோர்த்து பட்டியலின மாணவர்களின் கனவை கலைத்துள்ளது" எனக்குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அகில இந்தியத் தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவப் படிப்பு இடங்களில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாததற்கு அதிமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம்.  பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவைச் சீர்குலைத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய பாடம் புகட்டுவதன் மூலமே சமூக நீதியைப் பாதுகாக்க முடியும்" என கூறியுள்ளார்.

``மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் நடப்பாண்டில் இடஒதுக்கீடு மறுப்பு ஏமாற்றமளிக்கிறது எனவும், தீர்வு காண பிரதமரை சந்திக்க அனைத்துக்கட்சி குழு அமைக்க வேண்டும்" என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.