“பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்த நடிகை வனிதா விஜயகுமாருக்கு, கட்சி மேலிடம் எந்த பதிலும் சொல்லவில்லை” என்று அக்கட்சியினரே விளக்கமளித்ததாக நடிகை கஸ்தூரி ட்வீட் செய்து, கலாய்த்துள்ள சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

“மாணிக்கம்” உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை வனிதா விஜயகுமார். குடுப்பம் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால், அவர் கலைத்துறையில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த நிலையில். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டு வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிக்பாஸ் 3 வது சீசனில் நடிகை வனிதா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி, அவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்து போனது. அப்போது, அவருடன் நடிகை கஸ்தூரியும் கலந்துகொண்டார். இதன் மூலம் அவர்கள் இருவரும் தோழிகளாக மாறியதாகவும் கூறப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து,  விஜய் டிவி யில் வெளியான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வனிதா, அதன் மூலமும் பிரபலமானார். அப்போதே, அவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார். அந்த நேரத்தில், வனிதாவுக்கு உதவியாக இருந்த ஏற்கனவே 

திருமணமான பீட்டர் பால் என்பவருடன் காதல் வயப்பட்டு, அவரை கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி, வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்ட நிலையில், பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். 

குறிப்பாக, பீட்டர் பாலை வனிதா திருமணம் செய்து கொண்டபோது, பீட்டரின் முதல் மனைவிக்கு ஆதரவாக, நடிகை கஸ்தூரி தனது கருத்துக்களை முன் வைத்தார். தொடர்ந்து, வனிதாவின் திருமணம் மீதான கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவர் பீட்டர் பால் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாகக் கூறி, நடிகை வனிதா அவரை பிரிந்தார் என்றும், சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. 

இது தொடர்பாக, கடந்த வாரம் பீட்டர் பால் - வனிதா பிரிவு குறித்து தன்னுடைய டிவிட்டர் நகைச்சுவையாகக் கருத்து பதிவிட்டிருந்தார் நடிகை கஸ்தூரி. அதன் தொடர்ச்சியாக, தற்போது பாஜகவில் நடிகை வனிதா இணைவதாகப் பரவி வரும் தகவல் குறித்தும் புதிய டிவீட் செய்து உள்ளார். 

அதில், “வைரலாகும் வதந்தி குறித்து பாஜக தரப்பில் தெளிவு படுத்தியுள்ளனர். வனிதா மேடம் சேர விருப்பம் தெரிவித்தாராம். கட்சி மேலிடம் எந்த முடிவும் சொல்லவில்லையாம். அவர்கள் விளக்கத்தை அப்படியே உங்களுக்குத் தெரிவித்து விட்டேன். நன்றி” என்று, நடிகை கஸ்தூரி தனது டிவிட்டலில் பதிவு செய்து உள்ளார். 

இந்த விளக்கத்துக்கு முன்னதாக அவர் பதிவிட்டிருந்த மற்றொரு டிவிட்டர் பதிவில், “வனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்கன்ற கேள்விக்குப் பதில் கிடைச்சிருச்சு!!! ஒருமையில்லை, பன்மை! அடுத்து இணைவது காதலருடனில்லை, கட்சியிலாம். ஏற்கனவே, நோட்டாவுக்கு கம்மியா வோட்டு வாங்குற கட்சி. மேடம் பிரச்சாரம் பண்ணா எப்பிடி இருக்கும்? வனிதாவுக்கு பின்னாடி பல பேர் இருக்காங்கன்னு சொன்னதைத் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்களா ஒரு வேளை? அடுத்த வீடியோ தமிழக பாஜகவுக்குத் தான்” என்று நடிகை கஸ்தூரி தமிழக பாஜகவையும், நடிகை வனிதாவையும் நக்கலா கிண்டலடித்திருந்தார். 

இதனிடையே, “பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன்” என்று நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.