தர்மபுரி அருகே பெற்ற மகளுக்குத் தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பேகார அள்ளி பகுதியைச் சேர்ந்த சண்முகம், லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, கடந்த 13 வருடங்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

சண்முகம் - தனலட்சுமி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவன் - மனைவி இடையே, அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கமான ஒன்றாக இருந்துகொண்டே இருந்தது.

கணவன் - மனைவி இடையே, அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்ததால், மனைவி தனலட்சுமி அடிக்கடி கோபப்பட்டு தனது பிள்ளைகளைக் கணவன் வீட்டிலேயே விட்டு விட்டு, அங்குள்ள காவேரிபட்டணத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்று அங்கு சிறிது நாட்கள் தங்குவதும், அதன் பிறகு, சில நாட்கள் கழித்து மீண்டும் கணவன் வீட்டிற்கு வருவதும், மீண்டும் சண்டைப் போட்டுவிட்டு, தன் இரு பெண் பிள்ளைகளையும், கணவன் வீட்டிலேயே விட்டு விட்டு, தன் தாயார் வீட்டிற்குச் சென்று வருவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

இப்படியாக, கடந்த 20 நாட்களுக்கு வழக்கம் போல், தன்னுடைய கணவரிடம் சண்டை போட்டு விட்டு, ஒரு மகளை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, தன் அம்மா வீட்டிற்குத் தனலட்சுமி சென்று உள்ளார். இதனையடுத்து, நேற்று முன் தினம் மீண்டும் தன் கணவன் வீட்டிற்கு அவர் திரும்பி உள்ளார்.

அப்போது, கணவனின் பாதுகாப்பில் இருந்த மற்றொரு மகள், “தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்” என்று, சிறுமி தன் தாயாரிடம் அழுதுகொண்டு கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த தாயார் தனலட்சுமி, அங்குள்ள காரிமங்கலம் காவல் நிலையத்தில் கணவன் சண்முகம் மீது, பாதிக்கப்பட்ட தனது இராண்டாவது மகளை அழைத்துச் சென்று புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சண்முகத்தை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சண்முகத்தை பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இதன் தொடர்ச்சியாக, பெற்ற மகளுக்கே தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சண்முகத்தை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அதே நேரத்தில், கடந்த ஒரு வார காலத்திற்குள் மட்டும் இந்த காரிமங்கலம் காவல் நிலையத்தில் மட்டும் தொடர்ச்சியாக 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  

இதனிடையே, தர்மபுரி அருகே பெற்ற மகளுக்குத் தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.