விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் கடந்த சனிக்கிழமை மாலை 3 மணியளவில் தமிழகம் முழுவதும் மனுவை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளும் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு பக்திகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சுமார் 500க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். அந்த போராட்டத்தில் திருமாவளவன், வழக்கறிஞர் அருள்மொழி, பேராசிரியர் சுந்தரவள்ளி, திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், வழக்கறிஞர் எழில் கரோலின், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, 200க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் என வள்ளுவர் கோட்டம் போராட்ட களமே நிரம்பி காணப்பட்டது.

நிகழ்வில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ”ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெரியாரிய உணர்வாளர்கள் இணைந்து இணையவழி கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார்கள். ’பெரியார் மற்றும் இந்திய அரசியல்’ என்னும் தலைப்பில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் நான் உரையாற்றினேன். 40 நிமிடங்கள் பேசிய என்னுடைய உரையில், 40 விநாடிகளை மட்டும் துண்டித்து ஒட்டுமொத்தமாக நான் தாய் குலத்தையே இழிவு செய்கிறேன் என்று அவதூறு பரப்புரையைச் சனாதன கும்பல் பரப்பி வருகிறது. அந்த 40 நிமிட உரையைப் பெண்கள் கேட்கவேண்டும். சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பு தாய்மார்களும் அந்த உரையைக் கேட்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

1920ஆம் ஆண்டு தந்தை பெரியார் மனு நூலை எரித்தார். 1927ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆதி திராவிடர் என்கிற மாநாட்டை நடத்தி எம்.சி ராஜா மனுநூலை எரித்தார். 1927ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் மனுநூலை எரித்தார். சனாதன வாதிகள் என் மீது சுமத்திய பழியைத் துடைப்பதற்கான போரட்டாம் இல்லை இந்த போராட்டம், இது மகளிர் குலத்தின் மீதான இழிவைத் துடைக்கும் போராட்டம். நான் சார்ந்திருக்கும் கூட்டணிக் கட்சிகளைச் சிதைக்கவேண்டும் என்பதற்காகவே சனாதன கும்பல் வேண்டுமென்றே இந்த பொய்யைப் பரப்பிவருகிறது. அதிமுக அரசு மோடி அரசுக்குச் சேவை செய்துவருகிற காரணத்தினால் என்மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது. நான் அதை வரவேற்கிறேன், நீதிமன்றத்திற்கு வாருங்கள். மனு நூலில் என்ன வண்டவாளம் இருக்கிறது என்பதை விவாதிப்போம். பெண்களை இழிவு படுத்துவது திருமாவளவனா? மனுவா? என்று நீதிமன்றத்தில் விவாதிப்போம். அது ஒரு வரலாறாகட்டும்? எனவே என் மீது வழக்கு தொடர்ந்ததை நான் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.

மேலும், அதே பாஜகவைச் சேர்ந்த எச். ராஜா. எஸ்.வி சேகர் போன்றவர்கள் பெண்களை எந்த அளவுக்கு இழிவுபடுத்திப் பேசுகிறார்கள். தமிழகத்தில் பெண்களை இழிவுபடுத்திப் பேசியவர்கள் மீது தமிழக அரசு வழக்குத் தொடுத்திருக்கிறதா? கேட்டால் தேடிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் பேசியதை தான் நான் பேசியிருக்கிறேன். நான் பேசியது குற்றம் என்றால் அம்பேத்கரைக் கொண்டாடுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று சனாதன வாதிகளுக்கு நான் கேட்கிறேன். என்னைவிட ஆயிரம் மடங்கு மனு நூலை தோலுரித்துக் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர். எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவருக்கு அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுகிறீர்கள். சனாதன கும்பலுக்கு அம்பேத்கரைக் கொண்டாடுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது. இந்தியாவில் தனது கடைசி மூச்சுவரை சனாதனத்தை எதிர்த்த போராளி புரட்சியாளர் அம்பேத்கர். இனியும் தொடர்ந்து மனு நூலை விமர்சிப்போம். அந்நூலைத் தடை செய்யும்வரை எமது அறப்போர் தொடரும்” என்று கூறினார். 

இந்நிலையில், திருமாவளவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும் அவரை கைது செய்ய கோரியும் பாரதிய ஜனதா மாவட்ட அரசு தொடர்பு பிரிவு சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு பாரதிய ஜனதா அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் என்ஜினீயர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் குருமூர்த்தி, நகர தலைவர் நாராயணன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், ஊடகப்பிரிவு சிவக்குமார், குமராட்சி ஒன்றியம் செந்தில்குமார், கீரப்பாளையம் ஒன்றியம் மணிவண்ணன், மாவட்ட செயலாளர் அருண்குமார், உலகநாதன், பூபேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, என்ஜினீயர் ஜெயக்குமார் தலைமையில் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு சென்று, திருமாவளவன் எம்.பி. மீது புகார் மனுவை ஒன்றையும் அளித்தனர். 

இதேபோல, திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலத்தில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இருந்த போதிலும் நேற்று மாலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இந்து முன்னணி அமைப்பினர் மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பெண்களை பற்றி தவறாக பேசியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொல்.திருமாவளவன் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இந்து முன்னணியை சேர்ந்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல சங்ககிரி பழைய பஸ் நிலையம் அருகே சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவர் சின்னசாமி தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுவொருபக்கமிருக்க, திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவு மீறல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் தொல்.திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.