கன்னியாகுமரி மாவட்டத்தில் உயர் அதிகாரிகள் தொடர்ந்து பாலியல் டார்ச்சர் அளித்து வருவதாகப் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர், பிரதமர் வரை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் தனக்கு, அந்த துறையின் உயர் அதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் பெண் மருத்துவர் ஒருவர், பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்டையைச் சேர்ந்த பெண் மருத்துவர் பெமிலா, கடந்த 3 ஆண்டுகளாக அங்குள்ள முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணி புரிந்து வருகிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 21 ஆம் தேதி புதன் கிழமை “உயர் அதிகாரிகள் என்னைப் பணி செய்ய விடாமல் இடையூறு செய்வதாகக் கூறி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் தன் மகனுடன் அமர்ந்து” தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

தர்ணா போராட்டத்தின் போது, “எனது உயர் அதிகாரியான மருத்துவர் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், இதனால் அவர் மீது காவல் நிலையத்திலும் துறை அதிகாரிகளிடமும் பல முறை புகார்கள் அளித்ததாகவும்” அவர் கூறினார்.

“தன்னை மருத்துவமனையில் இருந்து தனிமைப்படுத்துவதற்காக சக மருத்துவமனை ஊழியர்களையும் அந்த அதிகாரி பயன்படுத்தி வருவதாகவும், தனது உயிருக்கு அச்சம் ஏற்படும் அளவுக்கு சம்பந்தம் இல்லாத நபர்களை வீட்டிற்கு அவ்வப்போது அனுப்பி என்னைத் தொடர்ந்து மிரட்டுவதாகவும்” அந்த பெண் மருத்துவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

“இதன் காரணமாக, தன்னுடைய வீட்டில் இருக்கும் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக் கூடும் என்று எண்ணி, தினந்தோறும் பணிக்கு வரும் போது, தன்னுடைய குழந்தையோடு வந்து கொண்டிருப்பதாகவும்” அவர் கூறினார்.

அத்துடன், “உயர் அதிகாரியின் நெருக்கடி குறித்து தமிழக முதலமைச்சர், பெண்கள் ஆணையம், மனித உரிமை ஆணையம், பிரதமர் என்று அனைத்து உயர் மட்ட அளவில் புகார்கள் அனுப்பி உள்ளதாகவும், ஆனால் இந்த பிரச்சனையில் யாரும் தலையிடாமல் இருப்பதாகவும், இதற்கு இதுவரை எவ்வித தீர்வும் ஏற்படவில்லை” என்று, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் பெமிலா குறிப்பிட்டார். 

குறிப்பாக, “எனது பிரச்னைக்கு காரணமானவர்களில் ஒருவரான, சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் மூலமாகவே எனது புகார் தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளதாகவும், இப்படியான விசாரணையில் எப்படி நியாயம் கிடைக்கும்” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதே போல், “கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பணகுடி மருத்துவமனையில் பணியாற்றிய போது அங்குள்ள உயர் அதிகாரியாக இருந்த கோலப்பன் என்னை பாலியல் ரீதியிலும், பல்வேறு வகையில் இடையூறு செய்ததாகவும்” குற்றம்சாட்டினார்.

“அவரும் தற்போதைய தனது உயர் அதிகாரியும் சேர்ந்து தொடர்ந்து என்னைத் துன்புறுத்தி வருவதாகவும்” கண்ணீர் மல்க கூறினார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள சக மருத்துவர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.