வீட்டில் புதையல் இருப்பதாக நம்பி, பெற்ற தாயே தனது 3 பிள்ளைகளை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள பூச்சி ரெட்டி பள்ளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி - விஜயா தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியரின் ஒரே மகளான 34 வயதான ஜெயந்தி, அங்குள்ள பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த பெண் ஜெயந்திக்கு 3 குழந்தைகள் மொத்தம் உள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில், வாரத்தில் வெள்ளிக் கிழமை, சனிக் கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் ஜெயந்தி, தனது தாய் வீட்டுக்குச் சென்று சாமியாடி குறி சொல்வது வழக்கமாக வைத்திருந்தார்.
 
அப்போது, இந்த குறி சொல்லும் போது, அவர் கோழி உள்பட சில பிராணிகளைப் பலி கொடுத்து பூஜை செய்வதாக அக்கம் பக்கத்தில் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், குறி சொல்லும் ஜெயந்தி, தனது வீட்டில் உள்ள புதையல் இருப்பதாக நினைத்து, அதனை எடுப்பதற்காகத் தனது 3 குழந்தைகளையும் நரபலி கொடுக்க, தாயான ஜெயந்தி முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பூஜைக்கு தேவையான சில விசயங்களை, ஜெயந்தி செய்து வந்திருக்கிறார். இதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குச் சந்தேகம் வந்துள்ளது.

இதனையடுத்து, இது தொடர்பாகத் திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலர் பிரிவில் இயங்கும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு 181 என்ற சேவை பிரிவுக்கு நேற்று அங்குள்ள மக்கள் சிலர், ரகசியமாகத் தவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, அதிகாரிகளான ஞான செல்வி, வழக்கு பணியாளர் சரண்யா ஆகியோர் திருத்தணி தாசில்தார் ஜெயராணிக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து, திருத்தணி வருவாய்த் துறையினர், மாவட்ட சமுக நல அதிகாரிகள் மற்றும் போலீசார் குறிப்பிட்ட அந்த பகுதிக்கு விரைந்து சென்று, அங்கு விசாரித்தனர்.

அப்போது, ஜெயந்தியின் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மகள், பிளஸ் 1 படிக்கும் 16 வயது மகள், மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மகன் ஆகியோரை வருகிற 13 ஆம் தேதி சனிக்கிழமை நரபலி கொடுக்க ஜெயந்தி முடிவு செய்து, அது தொடர்பான பூஜை முறைகளைச் செய்து வந்து வந்தது தெரியவந்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள், அதிகாரிகளிடம் புகார் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, ஜெயந்தியின் 3 குழந்தைகளையும் மீட்ட அதிகாரிகள், அவர்களைத் திருவள்ளூருக்கு அழைத்துச் சென்றனர். அத்துடன், இது தொடர்பாகத் தாயார் ஜெயந்தியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.