இந்திய திரையுலகில் பாத்திரத்திற்கு ஏற்றவாறு உழைக்கும் கலைஞன் சியான் விக்ரம். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க இருக்கும் சியான் 60 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்து விட்டு இத்திரைப்படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விக்ரம்.

இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்க வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பார் என கூறப்படுகிறது. படத்தில் மற்றொரு நாயகியாக நடிக்க சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

ஏற்கெனவே விக்ரம் நடித்த பிதாமகன் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடியிருந்த சிம்ரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் உடன் துருவ நட்சத்திரம் படத்தில் இணைந்து நடித்தார். ஆனால் அத்திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் மீண்டும் சியான் 60 படத்தில் விக்ரம் உடன் சிம்ரன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 சி.எஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சியான் 60 படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக அறிவிப்பு முன்பு வெளியானது. இந்நிலையில் அனிருத்துக்கு பதிலாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இன்று முதல் படப்பிடிப்பு துவங்கப்படுகிறது என்னும் ருசிகர செய்தியை தெரிவித்தார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் சியான் ரசிகர்கள்.