“இலவசங்களே தேவையில்லை என்ற நிலையை உருவாக்கப்போவதாக” நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் திருவிழா நடந்துகொண்டு இருக்கிறது. இதனால், களம் காணும் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களை மிக எளிதில் கவரும் வகையில், பல்வேறு இலவசங்களை அறிவித்துக்கொண்டு இருக்கின்றன.

இந்த இலவசத்தில் மிக முக்கியமாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் நிதி அளிக்கப் போவதாக அதிமுக, திமுக, மநீம கட்சிகள் அடுத்தடுத்து வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. 

குறிப்பாக, “குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும், ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவச மாக கொடுக்கப்படும்” என்றும், மகளிர் தினத்தையொட்டி அதிமுக தேர்தல் வாக்குறுதியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நேற்றைய தினம் அறிவித்தார்.

அதற்கு முன்னதாகவும், இதே போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை திமுகவும், மநீம கட்சியும் அறிவித்து இருந்தன.

இந்ந நிலையில், “நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் இலவசங்களே தேவையில்லை என்ற நிலையை உருவாக்கப்போவதாக” அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாகத் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், தனது தொகுதியில் முதல் நாள் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, திருவொற்றியூர் தேரடி, பர்மா காலனி, தல்லா குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய சீமான், “நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால், மக்களின் வாங்கும் திறனை உயர்த்தப்போவதாக” குறிப்பிட்டார். 

அத்துடன், அரசுப் பள்ளியில் பயிலும் அனைவருக்கும் அரசு வேலை என்ற நிலையை உருவாக்கப் போவதாகவும்” சீமான் உறுதிப்படத் தெரிவித்தார்.

மேலும், “இலவசங்களையும் கவர்ச்சித் திட்டங்களையும் கூறி மக்களை ஏமாற்றத் தயாராக இல்லை” என்றும், சீமான் அதிரடியாகப் பேசினார். 

அதே போல், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ‘“வசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.  

அதன் படி, இன்றைய தினம் மாலை 4 மணிக்கு முதல் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலும், 10 ஆம் தேதியான நாளை மாலை 4 மணிக்கு சென்னை பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களிலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.