வீட்டு வேலைக்கு பெண் வராததால், அவரது 17 வயது மகளை விநோதமான முறையில் அசிங்கப்படுத்திய காவலர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தான், இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்து உள்ள நம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, அந்த பகுதியில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வரை அந்த பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்ற பெண் வீட்டு வேலைகளை பா்த்து வந்தார். இவருக்கு 17 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார்.

இப்படியான நிலையில், காவலர் சுந்தரமூர்த்தியின் செயல்பாடுகள் பிடிக்காமல், வீட்டு வேலை செய்து வந்த முத்துமணி, அங்கு வேலைக்கு செல்லாமல்  நின்றுவிட்டார்.

இதனையடுத்து, காவலர் சுந்தரமூர்த்தி அவரைப் பல முறை தொடர்பு கொண்டு “எனது வீட்டுக்கு வேலைக்கு வா” என்று, அழைத்திருக்கிறார்.

ஆனால், முத்துமணி அதனை ஏற்க மறுத்துள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த காவலர் சுந்தரமூர்த்தி, அப்பெண்னின் 17 வயது மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதைப் போல் போலியான பத்திரிக்கை அச்சடித்து, அதில் ஊர் பெயர் தெரியாத ஒரு நபரின் பெயரை மணமகனாகக் குறிப்பிட்டு, அதனைப் பல்வேறு பகுதிகளுக்கும் பரப்பி வந்திருக்கிறார்.

அத்துடன், வீட்டு வேலை செய்யும் பெண் முத்துமணியின் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அவரது வீட்டிற்கும் இந்த கல்யாண பத்திரிக்கையை அனுப்பி வைத்திருக்கிறார். 

மேலும், அந்த பெண்ணின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைத்து அந்த பெண்ணிடம் பிரச்சனை செய்துவிட்டு, அவரது வீட்டில் இருந்த ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பணிப் பெண் முத்துமணி, சுந்தரமூர்த்தியிடம் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு, அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த பணிப் பெண் முத்துமணி, இது தொடர்பாக ஆலங்குடி காவல் நிலையத்தில், புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு போலியான திருமண பத்திரிக்கை அச்சடித்து அவமானப்படுத்திய காவலர் சுந்தரமூர்த்தியைக் கைது செய்து, அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.