சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இரு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. அதன்படி,  பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் குறித்து மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது. அதன்படி தமிழகத்தில் கடந்த ஆண்டு காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை  இன்னும் ஒரு வாரத்தில், கொண்டாடப்பட உள்ள நிலையில், இவ்வருடமும் அரசு கடந்த வருடத்தை போலவே இரண்டு மணி நேரம் வெடிக்க அனுமதியளிக்குமா அல்லது பட்டாசு வெடிக்கக்கூடாது என தடை போடுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த வருடம், கொரோனா பேரிடரால் ஏற்கனவே பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், பண்டிகைக் காலத்திலும் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கூறிவிட்டால் இன்னும் சிக்கல் ஏற்பட்டுவிடும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஏற்கெனவே இந்தியாவின் சில மாநிலங்கள் காற்று மாசுபாடு காரணமாக, பட்டாசு வெடிக்க தடை போட்டுள்ளது. இப்போதுள்ள சூழலில், அதுவே பட்டாசு தொழிலாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலும் அப்படியான நிலைப்பாடு உருவாகக்கூடாதென, பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற கோரி பட்டாசு தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் மத்திய மாநிலஅரசுகளை வலியுறுத்தி வந்தனர்.

அப்படியான சூழலில், இன்று தமிழக அரசு வெளியிட்டிருக்கும் தகவலின் படி, தீபாவளி அன்று காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்தாண்டு பட்டாசு வெடிக்கும் நேரம் எப்போது என்பதை அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாகவே, பட்டாசு வெடிப்பதில் இந்த நடைமுறைதான் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்காமல், பிற நேரங்களில் வெடித்து சட்டத்தை மீறுபவர்களுக்கு சட்டப்படி தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த வருடம், நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும், பள்ளிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அமைதி காக்க வேண்டிய இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று குடிசைகள் இருக்கும் பகுதிகளில் நெருப்பு பற்றக்கூடிய வகையில் பட்டாசு வெடிக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவிர பட்டாசு வெடிப்பது மற்றும் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழக மக்கள் அனைவரும் மாசில்லா தீபாவளியைக் கொண்டாடும்படி  அமைச்சர் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து, சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியிருப்பதாவது:

* தீபாவளி அன்று தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்.

* இரவு 7 மணி முதல் 9 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படும்.

* அரசுக்கு ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக பொதுமக்கள் தீபாவளி கொண்டாட வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.