தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ள நிலையில், தஞ்சையில் தற்போது மேலும் 27 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் தொற்று, தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளன. இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கையானது, ஒரே நாளில் மீண்டும் ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 

அதன் படி, தமிழகத்தில் கொரோனா பாதிப்படைந்த 989 பேரில் 985 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 4 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்திருப்பதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் இது வரை கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களின் மொத்தம் எண்ணிக்கையானது 8,63,363 ஆக உயர்ந்து உள்ளது. அத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையானது தற்போது 6,222 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 394 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 2,40,245 ஆக உயர்ந்திருக்கிறது.

எனினும், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 569 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கையானது தற்போது 8,44,568 ஆக அதிகரித்து உள்ளது.

முக்கியமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என மொத்தம் 9 பேர் நேற்றைய தினம் உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கையையானாது, 12,573 ஆக அதிகரித்திருக்கிறது.

அதே நேரத்தில், தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்கெனவே 68 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பகுதியில் புதிதாக 27 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 

அதாவது, தஞ்சையில் செயல்பட்டு வரும் 7 பள்ளிகளில் 68 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிதாக 2 தனியார் பள்ளிகளில் பயிலும் 27 மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தற்போது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன.

அதே போல், தஞ்சை அருகே தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று சற்று முன்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை உட்பட தமிழகம் எங்கும் கொரோனா பரவல் அதிகமாகக் காணப்படுவதால், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் உட்பட பொது மக்கள் அனைவரும் மீண்டும் பீதியடைந்து உள்ளனர். இதனால், முன்னேசெரிக்கையாக மாஸ்க் அணிவது உள்ளிட்ட விசயங்களில் அலட்சியம் காட்டாமல் அனைவரும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகத்தால் தற்போது அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. 

இதனிடையே, “சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என்றும், ஊரடங்கு குறித்து வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ், தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.