அரவக்குறிச்சி தொகுதியில் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் நிர்வாணமாக மனு தாக்கல் செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய சேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் தற்போது 100 நாட்களைக் கடந்து 150 வது நாளை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில், தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் களம் சூட்டுப்படிக்க தொடங்கி இருக்கின்றன.

இந்த நிலையில், அரசியல் கட்சியினர், அந்தந்த தொகுதிகளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திரண்ட விவசாயிகள், அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, அரை நிர்வாணமாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். 

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், விவசாயிகளிடம் ஆடைகளை உடுத்திக்கொண்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று, கூறியிருக்கிறார். ஆனால், இதனை ஏற்க மறுத்த விவசாயிகள், அதே அரை நிர்வாண நிலையிலேயே மனு தாக்கல் செய்ய முயன்றனர். இதனால், போலீசாருக்கும் - விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் விவசாய சங்க வேட்பாளர் பல்லப்பட்டி ராஜேந்திரன், திடீரென தனது ஆடைகளைக் களைந்து திடீரென்று நிர்வாணமாக நின்று உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், என்ன செய்வது புரியாமல் திகைத்துப் போய் நின்று உள்ளனர். இதனையடுத்து, அங்கு கூடியிருந்த விவசாயிகளை வலுக்கட்டாயமாகக் கைது செய்து வாகனத்தில் ஏற்றி போலீசார் அழைத்துச் சென்றனர்.

அதன் தொடர்ச்சியாக, செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “டெல்லியில் அமித்ஷாவும், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியும் எங்களை அழைத்துப் பேசி, அனைத்து சிறு குறு விவசாயிகளுக்கும் மாதம் 6 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்குகிறோம் என்று வாக்குறுதி அளித்தனர் என்றும், ஆனால் அதனை அவர்கள் நிறைவேற்றவில்லை என்றும்” கவலைத் தெரிவித்தார்.

அத்துடன், “கோதாவரியில் செல்லும் 2 ஆயிரம் கன அடி தண்ணீரை காவிரிக்கு திருப்பி விடுமாறு நாங்கள் கேட்டுக்கொண்டோம் என்றும், ஆனால் அடுத்த நாளே அதை நிறைவேற்றுவதாக அவர்கள் கூறிய நிலையில், அதுவும் நிறைவேற்றப்படவில்லை” என்றும், குறிப்பிட்டார்.

“விவசாயிகளுக்குத் தனிநபர் கடன் 3 முதல் 5 லட்சம் வரை வழங்கப்படும் என்றும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடனை திருப்பிச் செலுத்தினால் போதும் 

என்று மோடி கூறியதாகவும் குறிப்பிட்ட அவர், இதனை நம்பி நாங்கள் அப்போது போராட்டத்தை விலக்கிக் கொண்டோம் என்றும், ஆனால் இவை எதையும் மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

“விவசாயிகள் என்றால், இந்த நாட்டில் அடிமைகளா?” என்றும், அப்போது அவர் பகிரங்கமாகவே கேள்வியாக எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய அவர், “இதன் காரணமாகவே, பாஜக போட்டியிடும் தொகுதிகளில் விவசாய சங்க பிரதிநிதிகளை நிறுத்தி எங்கள் எதிர்ப்பை நாங்கள் தெரிவிப்போம் என்றும், இது தொடர்பான எங்களது போராட்டம் தொடரும்” என்றும், விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.