ஏற்கனவே 70 வயது முதியவரால் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்ட இரு சிறுமிகளுக்கு, பேய் ஓட்டுவதாக கூறி, மந்திரவாதி ஒருவர் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏழை தம்பதிகள், தங்களது 15 வயது மற்றும் 13 வயது மகளுடன், சேலத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக தங்கி அங்கேயே வேலை செய்து வந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கொரோனா ஊரடங்கு காலம் தற்போது வந்த நிலையில், அந்த தோட்டின் உரிமையார் சரிவர சம்பளம் தராத நிலையில், அவர்கள் குடும்பத்துடன் மீண்டும் தங்களது சொந்த ஊர் திரும்பி உள்ளனர்.

அவர்கள் ஊர் திரும்பிய நிலையில், அந்த தம்பதியின் 15 வயது மற்றும் 13 வயது மகள் இருவரும், பிரம்மை பிடித்தது போல் காணப்பட்டு உள்ளனர். வீட்டில் பெற்றோரிடம் எதுவும் பேசாமல் அப்படியே ஒரு வித பயத்துடனேயே இருந்து உள்ளனர்.

இது குறித்து, சிறுமியின் பெற்றோர் கேட்ட போது, சிறுமிகள் எந்த பதிலும் சொல்லாத நிலையில், சிறுமிகளுக்கு பேய் பிடித்து விட்டது என்று நினைத்த அந்த சிறுமிகளின் தாயார், இது பற்றி தங்களது மகள்களிடம் எதுவும் கேட்காமலேயே, மங்களபுரம் பகுதியில் உள்ள தங்களது உறவினரா சேகர் என்ற மந்திரவாதியிடம் மகள்களை அழைத்துச் சென்று உள்ளார். அவர், அங்குள்ள ஒரு கோயிலில், கோயில் பூசாரியாகவும் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அப்போது சிறுமிகளுக்கு பேய் பிடித்திருக்கிறது என கூறி நம்ப வைத்த மந்திரவாதி சேகர், தோஷம் கழிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். 

அதன் பிறகு, “சிறுமிகள் 2 பேரையும் இங்கேயே விட்டுச் செல்லுங்கள்” என்று, மந்திரவாதி கூறவே, தங்களது இரு பெண் குழந்தைகளையும் எந்த வித முன் யோசனையும் இன்றி, மந்திரவாதியின் பேச்சை நம்பி, பெண் பிள்ளைகள் இருவரையும் தனியே அங்கேயே அவரது தாயார் விட்டுச் சென்ற உள்ளார்.

அதன் பிறகு, ஒரு வாரமாக அந்த இரு சிறுமிகளிடமும் அந்த மந்திரவாதி, மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அத்துடன், “இங்கே ​நடந்ததை வெளியே சொன்னால், உன்னை கொன்று விடுவேன்” என்றும், அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால், மிகவும் பயந்து போன சிறுமிகள் இருவரும் வீடு 
திரும்பியதும், தங்களது பெற்றோரிடம் மந்திரவாதியின் பாலியல் பலாத்காரம் குறித்து கூறி அழுது உள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள மங்களாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மந்திரவாதி சேகரை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மந்திரவாதி சேகர், இரு சிறுமிகளையும் தொடர்ந்து ஒரு வாரமாக பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும், இது போன்ற பல பெண்களிடமும், சிறுமிகளிடமும் பில்லி சூனியம் மற்றும் ஜோதிடம் பார்ப்பதாக கூறி, பலரையும் பாலியல் வன்கொடுமை செய்ததும் 
தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார், சிறையில் அடைத்தனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட இருசிறுமிகளையும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அப்போது, அவர்களது உடல் நிலை மோசமடைந்த 
நிலையில் காணப்பட்டதால், சிறுமிகள் இருவரும் சேலத்தில் பெற்றோர் தோட்டத்தில் தங்கி வேலைபார்த்த போது, அந்த தோட்டின் உரிமையாளர், சிறுமிகளை 
மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததையும் கூறி உள்ளனர். இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை 
மேற்கொண்டு வந்த நிலையில், இரு சிறுமிகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த தோட்டத்தின் உரிமையாளர் 70 வயது முதியவர் 
உள்பட 15 பேரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.