செளகார்பேட்டை துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக “சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கொன்றதாக” கைதானவர்கள் வாக்குமூலம் அளித்து உள்ளார். 

வட மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 74 வயதான தலில் சந்த் என்பவர், சென்னை சவுகார்ப்பேட்டையில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவர், சென்னை வால்டாக்ஸ் சாலை விநாயகர் மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 70 வயதான மனைவி புஷ்பா பாய், 38 வயதான மகன் ஷீத்தல் ஆகியோருடன் வசித்து வந்தார். இவருடைய 35 வயதான மகள் பிங்கி, திருமணமாகி பேசின்பிரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில். கடந்த 11 ஆம் தேதி, மாலை 74 வயதான தலில் சந்த், மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகிய 3 பேரும் உடம்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் சடலமாக கிடந்தனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட இந்த சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், இது குறித்து யானைக்கவுனி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தினர். அத்துடன், அந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு 5 தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். 

இந்த விசாரணையில். குடும்ப பிரச்சினையில் ஷீத்தலின் மனைவி ஜெயமாலா தனது சகோதரர்கள் கைலாஷ், விகாஷ் உள்ளிட்டோருடன் இணைந்து, இந்த கொடூர கொலைகளைச் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், “ஜெயமாலா மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர்” என்பது தெரிய வந்தது.

ஜெயமாலாவுக்கும், ஷீத்தலுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், அவர்கள் முதலில் புனேயில் சில ஆண்டுகள் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன் ஷீத்தலுடன் வாழப் பிடிக்காமல், அவர் மனைவி ஜெயமாலா, புனே நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த விவகாரத்து மனுவில், “எனக்கு ஜீவனாம்சமாக 5 கோடி ரூபாய் தர வேண்டும்” என்றும், அவர் கூறி இருந்தார். இதன் காரணமாக, இரு வீட்டாருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தலில் சந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட இந்த வழக்கில், ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது உறவினர்கள் என மொத்தம் 3 பேர் அடுத்த 2 நாட்களில் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அதன்படி, மருமகள் ஜெயமாலா, சகோதரர் கைலாஷ் உள்பட 3 பேர் புனேவில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், “விசாரணையில் ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ், எனது சகோதரி ஜெயமாலாவுக்கு அவரது மாமனார் தலீல்சந்த், அவர்களது உறவினர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், இதை சீத்தல் குமார் கண்டும் காணாமல் இருப்பதாக ஜெயமாலா எங்களிடம் கூறி கண்ணீர் விட்டு அழுததாகவும், அதனால் இவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும்” அவர் ஒப்புக்கொண்டார். 

அத்துடன், இந்த கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் தான் வைத்திருந்தது நாட்டு துப்பாக்கி எனவும், தனது தம்பி விலாஸ் வைத்திருந்தது 
முன்னாள் விமானப்படை அலுவலரின் துப்பாக்கி” எனவும், அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, யார் அந்த முன்னாள் விமானப்படை அதிகாரி என்றும், அவர் 
எப்படி இவர்களுக்குப் பழக்கம் ஆனார் என்பது பற்றியும் அதிகாரிகள் தீவிரமாக தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.