கள்ளக் காதலன் விபத்தில் இறந்த சோகம் தங்காமல் தவித்த அவரது காதலி விஷம் குடித்தும், தூக்கிட்டும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் திரு.வி.க நகரைச் சேர்ந்த 29 வயதான துரை கண்ணன், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அதே நேரத்தில், துரை கண்ணன் எதிர் வீட்டில் 45 வயதான ஜெகஜோதி என்ற பெண், தனது கணவன் முருகன் உடன் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்ததால், கணவனை விட்டு பிரிந்து ஜெகஜோதி தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், 29 வயதான துரை கண்ணனுக்கும், 45 வயதான ஜெகஜோதிக்கும் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தைத் 
தாண்டிய உறவாக இருந்து உள்ளது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படியே சில காலம் அவர்கள் ஒரு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு துரை கண்ணன் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சூலூர் சிந்தாமணி புதூர் அருகே திடீரென்று அவர் சாலை விபத்தில் சிக்கி உள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்தார் துரை கண்ணனை, அந்த பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனை பிறகு, அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, அங்குள்ள 
கண்ணம்பாளையத்தில் உள்ள சுடுகாட்டில் அவரது குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்தனர். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது, துரைக்கண்ணன் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் ஜெகஜோதி, சுடுகாட்டிற்குச் சென்று துரைக்கண்ணுவைப் பார்க்க வேண்டுமென்று மூடிய குழியைத் தோண்டி உள்ளார். இது குறித்து தகவலின் பேரில் துரைக்கண்ணன் குடும்பத்தினர் சுடுகாட்டிற்குச் சென்று ஜெகஜோதி கடுமையாக எச்சரித்துவிட்டு குழியை மீண்டும் மூடி விட்டு வந்து உள்ளனர்.

இதனையடுத்து, வீடு திரும்பிய ஜெகஜோதி, கடும் மன உளைச்சலில் இருந்து உள்ளார். தனக்கு இருக்கும் 2 குழந்தைகளையும் மறந்து, கள்ளக் காதல் கண்ணை மறைத்த நிலையில், அங்குள்ள பாப்பம்பட்டி பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான பாழடைந்த வீட்டில் மதுவில் சானி பவுடரை கலந்து குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். ஆனால், அவருக்கு ஒன்றும் ஆகாத நிலையில், அதன் பிறகு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக அங்குள்ள சூலூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஜெகஜோதி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட ஜெகஜோதிக்கும், விபத்தில் உயிரிழந்த துரைக்கண்ணனுக்கு கடந்த சில நாட்களாக கள்ளக் காதல் இருந்து வந்தது தெரிய வந்தது. 

அத்துடன், அவர்கள் இருவரும் உயிருடன் இருந்த போது யாருக்கும் தெரியாத இந்த கள்ளக் காதல் விசயம், அவர்கள் உயிரிழந்ததற்குப் பிறகு அனைவருக்கும் தெரியவரவே, இருதரப்பு உறவினர்களும் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதன் காரணமாக, ஜெகஜோதியின் 2 குழந்தைகளும் யாரும் ஆதரவு இன்றி தவித்து வருகின்றனர்.