காதல் என்ற பெயரில் இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய காதலன் தலைமறைவாகி உள்ள நிலையில், குழந்தையை பெற்றெடுத்த காதலி காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்து உள்ள குருக்குபட்டி இலங்கை அகதிகள் முகாமில் இந்திர குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் 20 வயதான நர்மதா, கோயமுத்தூரில் உள்ள தனியார் நூல் மில்லில் பணியாற்றி வந்தார். 

அப்போது, இளம் பெண் நர்மதாவின் தோழிக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அடிக்கடி போன் அழைப்பு வந்து உள்ளது. இதனால், பயந்த நர்மதாவின் தோழி, இந்த நபரிடம் பேசும் படி நர்மதாவிடம், அவரது தோழி அந்த போன் நம்பரை கொடுத்து பேச வைத்திருக்கிறார்.

அதன் படி, அந்த எண்ணை தொடர்புகொண்டு பேசிய நர்மதா, தனது தோழிக்கு அழைப்பு விடுத்தது குறித்து விவரம் கேட்டு உள்ளார். அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே இனம் புரியாத காதல் மலர்ந்து உள்ளது. 

அதன் பிறகு, அலுவலத்தில் இருந்தால் காதலனுடன் அதிக நேரம் பேச முடியவில்லை என்பதால், வேலை கடினமாக இருப்பதாகப் பெற்றோரிடம் கூறி விட்டு, ஓமலூரில் உள்ள தனது வீட்டிற்கு அவர் திரும்பி உள்ளார். இதனையடுத்து, கடைக்கு செல்வதாகத் தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்ற நர்மதா, இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

இதனால், பயந்து போன நர்மதாவின் பெற்றோர், அந்த பகுதியில் முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர். அப்போது, தனது பெற்றோருக்கு வாட்ஸ்ஆப் மூலம் பேசிய அனுப்பிய இளம் பெண் நர்மதா, “நான் என் காதலன் உடன் சென்று விட்டதாகவும், என்னை தேட வேண்டாம்” என்றும், கூறி உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த நர்மதாவின் பெற்றோர் கடும் வேதனையில் உரைந்து போனார்கள். 

இப்படியே 5 மாதங்கள் சென்ற நிலையில், தற்போது இளம் பெண் நர்மதா, அவரது அண்ணன் வீட்டுக்கு வந்து உள்ளார். இதனை அறிந்த நர்மதாவின் பெற்றோர், நர்மதாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்து உள்ளனர். அப்போது, “திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த 22 வயதான கோகுல் என்ற இளைஞர், ஆசை வார்த்தைக் கூறி திருமணம் செய்து கொண்டதும், இதில் நர்மதா கர்ப்பமானதும் அவரை விட்டு கோகுல் தலைமறைவானதும்” தெரிய வந்தது.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த நர்மதாவின் உறவினர்கள், செல்போன் மூலம் கோகுலை தொடர்பு கொண்ட நர்மதாவின் உறவினர்கள், “நர்மதாவுடன் வந்து வாழ வருமாறு அழைத்து உள்ளனர். ஆனால், அவரோ “தற்போது கொரோனா பரவி வருவதால், தற்போது வர முடியாது” என்று கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இளம் பெண் நர்மதாவுக்கு குழந்தை பிறந்தது. அப்போதும், கொரோனாவை காரணம் காட்டி, கோகுல் தற்போது வர முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த நர்மதாவின் பெற்றோர், இது குறித்து, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், காதலன் கோகுல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகக், காதலி நர்மதாவிற்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த நர்மதா, “என்னை ஏமாற்றிய கோகுல் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி” திருப்பத்தூர் காவல் நிலையம் முன்பு தனது  கைக்குழந்தையுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, அவர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.