செங்கல்பட்டு அருகே 9 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அருகில் உள்ள மேலச்சேரி மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்த 26 வயதான கார்த்திக், காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

அங்கு, அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த 35 வயது பெண் ஒருவர், தனது ஒரே மகனோடு அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள சத்துணவு மையத்தில் பணியாற்றி வருகிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, அதாவது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஆசிரியர் கார்த்திக் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று, “நான் ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறேன். உங்கள் மகனை என்னுடைய வீட்டுக்கு அனுப்பி படிக்க வையுங்கள். நான் அவனுக்கு ஆன்லைன் வகுப்பு சொல்லி தருகிறேன்” என்று கூறிவிட்டு வந்திருக்கிறார். 

இதனையடுத்து, அந்த பெண்ணும், செங்கல்பட்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் தன்னுடைய மகனை, கார்த்திக் வீட்டில் நடத்தப்பட்டு வரும் ஆன்லைன் வகுப்புக்கு அனுப்பி வைத்து உள்ளார். 

அதன் படி, அந்த 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவனும், ஆசிரியர் கார்த்திக் வீட்டிற்கு படிக்க வந்து உள்ளார். இப்படியாக, கடந்த 3 மாதங்களாக ஆன்லைன் வகுப்புக்கு சென்ற மகன், கடந்த சில நாட்களாகவே வீட்டில் சகஜமான நிலையில் இல்லாமல், வழக்கத்தை விட மிகவும் சோர்வுடன் காணப்பட்டு உள்ளான். 

அத்துடன், அடிக்கடி அந்த மாணவன் வாந்தியெடுத்துக் கொண்டு இருந்து உள்ளான். இதனைப் பார்த்த அந்த மாணவனின் தாயார், தன்னுடைய மகனிடம் இது குறித்து விசாரித்து உள்ளனர். 

அப்போது, “ஆசிரியர் கார்த்திக் தன்னுடைய உடல் ஆசைக்காக 13 வயது சிறுவன் என்றும் பாராமல், கடுமையாகத் தாக்கி வலுக்கட்டாயமாக பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தித் துன்புறுத்தி” வந்திருக்கிறார். 

குறிப்பாக, இப்படி மிரட்டி பாலியல் இச்சையில் ஈடுபட வைத்ததை, அவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டி வந்து உள்ளார். அந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு, அந்த மாணவனை அந்த ஆசிரியர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்து உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தயார், ஆசிரியர் கார்த்திக்கின் வீட்டுக்குச் சென்று பார்த்து உள்ளார். அப்போது, ஆசிரியர் கார்த்திக் அங்க குளித்துக் கொண்டு இருந்து உள்ளார். அதனைப் பயன்படுத்திக்கொண்ட அந்த பெண், அவரது செல்போனை சோதனை செய்து உள்ளார். அதில், தன்னுடைய மகன் சம்மந்தமாக இருந்த அனைத்து புகைப்படங்களையும், தன்னுடைய செல்போனுக்கு அனுப்பி வைத்து சாமர்த்தியமாக, அங்கிருந்து வீடு திரும்பி உள்ளார். 

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியோடு அனைத்து ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு, பாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசிரியர் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.