ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது தொடர்பாக முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, அமலாக்கப் பிரிவு விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரானார்.

83 வயதான பரூக் அப்துல்லாவிடம் கடந்த 19-ம் தேதி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த வழக்குத் தொடர்பாக ஏறக்குறைய 6 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், இன்று நேரில் ஆஜராகியுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக, ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிதி உதவி வழங்கி வந்தது. இதற்காக, கடந்த 2005-2006 நிதியாண்டு முதல் 2011-2012 நிதியாண்டு வரை ரூ.94 கோடியே 6 லட்சத்தை கிரிக்கெட் வாரியம் அளித்தது.

இந்த பணத்தில் ரூ.43 கோடியே 69 லட்சம் கையாடல் நடந்ததாக ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. பின்னர், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி. உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

சி.பி.ஐ. வழக்கின் அடிப்படையில், இதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கு தொடர்பாக, பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை அன்று விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்தை சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டனர்.

இந்த விசாரணை குறித்து பரூக் அப்துல்லா கூறுகையில், “அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். எனக்குப் பயமில்லை” எனத் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பாக் பகுதியில் அமைந்திருக்கும் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு நேரில் இன்று காலை பரூக் அப்துல்லா விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.