3 வது கணவரை பிரிந்து விட்டதாக வெளியான தகவலை அடுத்து, “என் வாழ்க்கைத் துணை மீது பழிபோட விரும்பவில்லை” என்று, நடிகை வனிதா விளக்கம் அளித்து உள்ளார்.

கொரோனா பரபரப்புக்கு மத்தியிலும், கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி விஷூவல் எஃபெக்ட்ஸ் கலைஞர் பீட்டர் பால் - வனிதா விஜயகுமார் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது. இது தொடர்பாக புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் பெரும் வைரலானது.

இதனையடுத்து, பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன், “என்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல், நடிகை வனிதாவை எனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக” காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  

மேலும், “எனது கணவர் குடிக்கு அடிமையானவர் என்றும், பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் இணைய ஊடகங்கள் மூலமாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து வனிதா விஜயகுமார் - பீட்டர் பாலின் திருமணம் பற்றி சர்ச்சைகள் பெரிய அளவில் வெடித்துக் கிளம்பின. 

இதன் தொடர்ச்சியாக, தன்னை விமர்சித்த நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மற்றும் ரவீந்தர் சந்திரசேகரன் உள்ளிட்டோருக்கு அதிரடியாக நடிகை வனிதா பதிலளிக்கும் வகையில் விமர்சனம் செய்தார்.

இப்படியாக கடும் விமர்சனங்களுடன் தொடங்கிய பீட்டர் பால் - வனிதா திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றுகொண்டு இருந்தது.

இதனையடுத்து, சமீபத்தில் பீட்டர் பால் மற்றும் தனது குழந்தைகளுடன் கோவா சென்ற வனிதா, தனது 40 வது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார். அங்கு, பீட்டர் பால் - வனிதா இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகத் தனது கணவரை நடிகை வனிதா, வீட்டை விட்டுத் துரத்தி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து உருக்கமான ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள நடிகை வனிதா, அதில் எந்த இடத்திலும் கணவன் பீட்டர் பாலின் பெயரையோ, அவரைப் பிரிந்ததையோ அவர் நேரடியாகத் தெரிவிக்கவில்லை.

அதன்படி, வனிதா வெளியிட்டு உள்ள விளக்கமான அறிக்கையில், “நான் எதையும் மறைக்க வில்லை. நான் என் குழந்தைகளுக்கும், வேலைக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல், பிரச்சினைகளைத் திடமாக நின்று எதிர்கொண்டு வருகிறேன். என் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஒன்றும் புதிதல்ல. வாழ்க்கை ஒரு பாடம். அதில், நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன்.

நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், பொய் செய்திகளைப் படித்துவிட்டு ஏதாவது ஒரு கதையைக் கட்டிக்கொண்டிருக்காதீர்கள். நான் எதையும் தவறாக செய்து விடவில்லை. அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு நான் அன்பு செலுத்தினேன். தற்போது, என் கனவுகளும், நம்பிக்கைகளும் நொறுங்கிய நிலையில் நிற்கிறேன்.

இதுவும் கடந்து போகும் என்று நம்புகிறேன். நான் யாரிடமும் எதையும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. என் கணவர் மீது குறை சொல்லி அதன் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்க மாட்டேன். நான் முதிர்ச்சியடைந்திருக்கிறேன். இது என் வாழ்க்கை. நானே எதிர்கொள்கிறேன். என் குழந்தைகளுக்காகவும், என்னைச் சுற்றி இருப்பவர்களையும் மனதில்கொண்டு சரியான முடிவை எடுத்திருக்கிறேன். இறுதியாக, நான் இது வரை எதையும் இழக்கவில்லை” என்று, தனது விளக்கத்தில் நடிகை வனிதா தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, கணவன் பீட்டர் பாலை விட்டுப் பிரிந்ததாக வெளியான செய்திக்கு, விளக்கம் அளித்துள்ள நடிகை வனிதாவின் இந்த அறிக்கை, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.