பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். அதையடுத்து முத்தையா இயக்கத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்த மருது திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளராக இருந்த ஆர்.கே.சுரேஷ் தற்போது வில்லன், கதாநாயகனாக நடித்து வருகிறார். சிறந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் தன்னை தயார் செய்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். 

இந்நிலையில், ஆர்.கே. சுரேஷுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் மது என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. மிகவும் ரகசியமாக நடந்த இந்தத் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்களாம். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து திருமணமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஆர்.கே.சுரேஷ். இந்த புகைப்படத்தை திரை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமண பந்தத்தில் நுழையும் ஆர்.கே.சுரேஷுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா. 

பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ள புதிய படமான விசித்திரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. ஜோசப் என்ற மலையாள படத்தில் ரீமேக் தான் இந்த படம். ஜோசப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடித்திருந்தார். க்ரைம் திரில்லரான இப்படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பு அந்த படம் பெற்ற நிலையில் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விசித்திரன் படத்தினை இயக்குனர் எம். பத்மகுமார் இயக்கி வருகிறார்.

விசித்திரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். இறுதிக் கட்ட பணிகளில் என போஸ்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்பதால் படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று தெரிகிறது. இதனால் விரைவில் இந்த படம் ரிலீஸாக வாய்ப்பு இருக்கிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விசித்திரன் படத்தில் அவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ரோலுக்காக அவர் தன்னுடைய உடலை ஃபிட்டாக 73 கிலோவாக குறைத்து இருந்தார். மற்றொரு ரோலுக்காக அவர் 22 கிலோ உடல் எடையை அதிகரித்து குண்டாக தொப்பையுடன் இருக்கும் புகைப்படமும் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி இருந்தது. ஒரு ரோலுக்கு 95 கிலோ, மற்றொரு ரோலுக்கு 73 கிலோ என அப்படியே தன்னுடைய உடலை ஆர்கே சுரேஷ் மாற்றியிருந்தது பலருக்கும் மிகப் பெரிய ஆச்சர்யத்தை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் ஜோசப் படத்தினை இயக்கிய எம் பத்மகுமார் தான் தமிழிலும் அதனை இயக்கி உள்ளார். இதற்கு முன்பு அவர் மோகன்லால், மம்முட்டி போன்ற மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.