கடந்த 1999-ம் ஆண்டு வெளியான கண்ணோடு காண்பதெல்லாம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரபு சாலமன். அதைத்தொடர்ந்து கிங், லீ, கொக்கி, லாடம் போன்ற படங்களை இயக்கினார். 2010-ம் ஆண்டு வெளியான மைனா திரைப்படம் பிரபு சாலமனின் கம்பேக் என்றே கூறலாம். கும்கி, தொடரி, கயல் என தொடர்ந்து ஹிட் படங்களை தந்தார். சிறந்த இயக்குனரான இவர், சீரான தயாரிப்பாளரும் கூட. சட்டை, ரூபாய் ஆகிய படங்களை தயாரித்தார். 

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஈராஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் பெரும் பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து முதல் பாடலான தாலாட்டு பாடும் பாடல் வீடியோ இந்த லாக்டவுனில் வெளியானது. 

ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. திரையரங்குகுகளும் திறக்கப்படாத நிலையில் உள்ளதால், இதன் ரிலீஸ் தேதி சந்தேகமாகவே இருந்தது. இந்நிலையில் காடன் திரைப்படம் 2021-ம் ஆண்டு பொங்கல் நாளன்று வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் திரை ரசிகர்கள். 

ராணாவுடன் முதல் முறையாக இணைகிறார் விஷ்ணு விஷால். அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்னு விஷால் நடிக்க எஃப்.ஐ.ஆர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். டீஸர் ஏற்கனவே வெளியானது. சமீபத்தில் யார் இந்த இர்ஃபான் அஹ்மத் என்ற ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது படக்குழு. 

விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார். 

இந்த லாக்டவுனில் ராணாவின் திருமணமும் நடந்து முடிந்தது. காடன் படத்தின் ரிலீஸை தனது மனைவி மிஹீகாவுடன் கொண்டாடுவார் ராணா.