“அவனுக்கெல்லாம் கல்யாணமா?” என்று, நண்பர்களிடம் கேலி பேசிய தம்பியை சொந்த அண்ணனே கொலை செய்து உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

மதுரை மாவட்டம் திருமங்கலம் செங்குளம் பகுதியைச் சேர்ந்த மருதன், அந்த பகுதியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளார். இவருக்கு, பாண்டியராஜன், சின்னதுரை, தினேஷ் என்று 3 மகன்கள் இருந்தனர்.

இதில், மூத்த மகன் பாண்டியராஜனுக்கும், இளைய மகன் தினேஷ்க்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது. இதனால், அவர்களுக்குள் வீட்டில் எப்போதும் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். இவர்களால், இவரது பெற்றோர்களும் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மூத்த மகன் பாண்டியராஜனுக்கு அவரது பெற்றோர் திருமணத்திற்குப் பெண் பார்த்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தனது அண்ணன் திருமணம் குறித்து, “அவனுக்கெல்லாம் திருமணம் தேவையா? திருமணம் ஒரு கேடா” என்கிற ரீதியில் தன் நண்பர்களிடமும், ஊர் மக்களிடம் இளைய மகன் தினேஷ் கேலியும் கிண்டலும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாண்டியராஜனின் நண்பர்கள், இந்த தகவலை பாண்டியராஜனின் கவனத்திற்குக் கொண்டு சென்று உள்ளனர். இதன் காரணமாக, கடந்த 3 நாட்களாக மீண்டும் மூத்த மகன் பாண்டியராஜனுக்கும், இளைய மகன் தினேஷ்க்கும் இடையே சண்டை நடந்துகொண்டே இருந்து உள்ளது.

இந்நிலையில், தம்பி தினேஷ் மீது கடும் ஆத்திரமடைந்த பாண்டியராஜன், அவரை கொலை செய்யத் திட்டமிட்டார். அதன்படி, தினேஷ் எப்போதும் தன் வீட்டின் மொட்டை மாடியில் தனியாக உறங்குவது வழக்கம். அதன்படியே, நேற்று இரவும் அவர் தனியாக வீட்டின் மொட்டை மாடியில் உறங்கிக்கொண்டு இருந்தார். 

அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்ற பாண்டியராஜன், தனது தம்பியை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்ய முயன்று உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் தினேஷ் மயங்கிடவே, பாண்டியராஜன் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளார்.

இதனையடுத்து, மறு நாள் காலையில், தினேஷின் பெற்றோர், தன் மகனின் நிலையைப் பார்த்துப் பதறிப்போய் அங்குள்ள ஒரு மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடி உள்ளனர். அங்கு, அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதே நேரத்தில் வீட்டிலிருந்த மூத்த மகன் பாண்டியராஜனும் தலைமறைவானது தெரிய வந்தது.

இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து குடும்பத்தினர் அனைவரிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மூத்த மகன் பாண்டியராஜன் தான், தன் தம்பியை கொடூரமாகத் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. 

மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள பாண்டியராஜனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், அப்பகுதி மக்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது.