சென்னை, வடபழனியில் கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின், செய்த்யாளர்கள் மத்தியில் முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது :

``தமிழக அரசு, அனைவருக்கும் உயர்தர மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் மிகச்சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதனால்தான், இந்தியாவிலேயே தமிழ்நாடு மருத்துவத் துறையில் ஒரு முன்னோடி மாநிலமாக இன்றைய தினம் விளங்கி வருகிறது.

ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியினைப் பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகள் அளித்தல் போன்ற பல முன்னோடித் திட்டங்களை, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான சுகாதாரத் திட்டம், பிரசவ உடனாளர் திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் மகளிருக்கான அம்மா மகளிர் முழு உடல் பரிசோதனை திட்டம், நடமாடும் மருத்துவமனை திட்டம், அம்மா மருந்தகம் போன்ற தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் திட்டம், உயர்நிலை மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், 108 அவசர கால ஊர்தி சேவை, ரத்த வங்கிகள், விபத்து சேவை மையங்களுடன் கூடிய உயர் சிறப்பு மருத்துவமனைகளை நிறுவுதல் போன்ற பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படும் சிமாங்க் மையங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. தாய்சேய் நலப் பிரிவுகள் ஒப்புயர்வு மையங்களாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18 ஆயிரம் ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 99.9 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவது இத்திட்டத்தின் வெற்றியைக் காட்டுகிறது.

கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 16-ல் இருந்து 15 ஆகவும், பேறுகாலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரையில், 2030-ல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை இப்போதே அடைந்து விட்டோம் என்பது ஒரு சரித்திர சாதனையாகும். இந்த ஆட்சியில், 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 30 படுக்கை வசதி, ஸ்கேன் போன்ற வசதிகளுடன் 166 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில், நவீன இணையவழி கண் பரிசோதனை மையங்கள், மாவட்டத்திற்கு ஒன்று வீதம், ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு 56 சி.டி.ஸ்கேன், 22 எம்.ஆர்.ஐ. ஸ்கேன், 18 கேத்லேப் மற்றும் 530 டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு உயரிய சிகிச்சை அளிக்கும் வகையில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 அரசு மருத்துவமனைகளில் 'லீனியர் ஆக்ஸிலரேட்டர்' (Linear Accelerator) என்ற உயர் தொழில்நுட்பக் கருவி நிறுவப்பட்டு வருகிறது.

சென்னை அடையாறு, புற்றுநோய் மையத்தை 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி, நிறைவடையும் தருவாயில் உள்ளது. 59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு புற்றுநோய் மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேன்மைமிகு மையம் ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு 5 வருடங்களாகத் தொடர்ந்து தேசிய அளவில் மிகச் சிறந்த மாநில விருதைப் பெற்று வருகிறது. உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மருத்துவமனைக்கான விருது, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய தர உறுதி திட்டத்தின் கீழ், சிறந்த செயல்பாடுகளுக்காக தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு மருத்துவமனைகள் மற்றும் 47 ஆரம்ப சுகாதார நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசால் பாராட்டுச் சான்றிதழும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன.

உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாது, மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதிலும், தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்து வருகின்ற காரணத்தினால், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக விளங்குகின்றது.

மக்களுக்குத் தரமான மருத்துவ சேவைகளை அளிப்பதில், அரசு மருத்துவமனைகளோடு, தனியார் மருத்துவமனைகளும் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இன்றைக்குத் தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் பெறுவதற்காக, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். இதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

2010-2011 ஆம் ஆண்டில் 1,945 ஆக இருந்த மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள், தற்போது 3,400 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அதிக அளவில் தமிழ்நாட்டைச் சார்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை நனவாக்கும் விதமாக, தமிழக அரசு, குறுகிய காலத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, அவை அனைத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம், வரும் ஆண்டுகளில் கூடுதலாக 1,650 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுத்த அரசு இந்த அரசு.

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவினை மெய்ப்பிக்கும் வகையில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது.

உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக இன்றையதினம் விளங்கி வருகிறது.

மருத்துவம் நுண் கலையாகும். அது வணிகமன்று. ஒரு சேர இதயமும் மூளையும் ஒருமித்து பணியாற்றும் உன்னதமான பணியே மருத்துவமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் மருத்துவமனையை நாடி வரும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் அன்புடன் பழகி, அவர்களுக்கு உயரிய மருத்துவ சேவையை வழங்க வேண்டும்.

இறைவன் எப்படி தன்னை நாடி வரும் மக்களிடம், வித்தியாசம் ஏதும் பாராமல், அவர்களின் குறையைத் தீர்க்கின்றானோ, அதேபோல் மருத்துவர்களும், தங்களை நாடி வரும் நோயாளிகளிடம் வித்தியாசம் ஏதும் பாராமல் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்கி, அவர்களது நோயைக் குணப்படுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சமீபத்தில் கொரோனா நோய்த் தொற்றின் பரவலை, மருத்துவத் துறையில் முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்பட்ட மேலை நாடுகளைவிட, குறுகிய காலத்தில் அதிகமாக கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்றியது நமது நாட்டு மருத்துவர்கள்தான் என்பது நமக்கெல்லாம் பெருமை.

மாநிலத்தில் உள்ள மிகவும் ஏழையான ஒரு நோயாளிக்கு எத்தகைய மருத்துவ சிகிச்சை கிடைக்கின்றது என்பதைப் பொறுத்தே மாநிலத்தின் முழு சுகாதாரம் அளவிடப்படுகிறது. எனவே, ஏழை, எளிய மக்களுக்கு உயரிய சிகிச்சைகள் தேவைப்பட்டு, அவர்கள் தனியார் மருத்துவமனைகளை அணுக வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்ற, தமிழக அரசு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்