தமிழகத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் தமிழகம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக, பள்ளி - கல்லூரி உள்ளிட்ட ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு, படிப்படியாக கொரோனா வைரஸ் தொற்று குறையத் தொடங்கியதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இதன் படி, தமிழக அரசு அறிவித்திருந்த ஊரடங்கு இன்றோடு முடிவுக்கு வரும் நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி வரை மேலும் பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

அதன் படி, தமிழகத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.

அதாவது, “நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி; கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் வரும் 7 ஆம் துதி முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அதன் படி, மாணவர்களுக்கு என விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை, முதுநிலை ஆகிய வகுப்புகளும் வரும் 7 ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. 

எனினும், 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது” என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அந்த மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது” என்று, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

அதே போல், தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் 50 சதவீதமாக குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியான நிலையில், அது தொடர்பான ஒரு விரிவான அறிக்கையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இன்றைய தினம் தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கிறார். 

அதன் பிறகு, தமிழக முதலமைச்சரின் ஒப்புதலோடு இந்த பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அரசாணை வெளியாக இருக்கின்றது என்றும், கூறப்படுகிறது. 

மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படாது இருக்கும் நிலையில், இப்படி ஒரு முடிவைப் பள்ளிக் கல்வித் துறை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், “முதல்வரிடம் அறிக்கை அளித்த அடுத்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், அரையாண்டு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்ற தகவல் தவறானது” என்றும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.