“அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கும் வரை பொறுத்திருங்கள்.. தொடர்ந்து உறுதியாக செயல்படுங்கள் நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன்" என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாகவும், தனது உடல் நலம் கருதி நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி துவக்க மாட்டார் என்று சமூக வலைத்தளங்களில் அவரின் பெயரில் கடந்த மாதம் அறிக்கை ஒன்று வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், “அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று மறுத்தார். 

அதே நேரத்தில், “அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானவை” என்றும், நடிகர் ரஜினிகாந்த் ஒப்புக் கொண்டார்.

இதன் காணமாக, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவக்குவாரா? மாட்டாரா? என்ற கேள்வி, தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாத பொருளாக எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக, அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என்று, அவர் தனது டிவிட்டர் மூலமாக தெரிவித்து இருந்தார். 

முக்கியமாக, “அரசியல் கட்சியைத் தொடங்கி, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக” ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்தார்.

எனினும், கட்சி தொடங்குவதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனா பரவல் காரணமாக கட்சி தொடங்கும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நேரத்தில் முடிவெடுக்க உள்ளதாக ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார்.

அதன் படி சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன், நடிகர் ரஜினிகாந்த் தற்போது முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று நேற்று மாலை செய்திகள் வெளியானது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பங்கேற்க போயஸ் இல்லத்தில் இருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்திற்கு, அவரது வீட்டு முன் திரண்டு இருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அதன் தொடர்ச்சியாக, ராகவேந்திரா மண்டபம் வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த், உடனடியாக தனது மன்ற ரசிகர்களுடனான ஆலோசனையைத் தொடங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 37 மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக நடிகர் ரஜினிகாந்த் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

கூட்டத்திற்கு முன்னதாக, “கட்சி தொடங்கினால் ரஜினிதான் முதல்வர் வேட்பாளர்” என்று, அவரது ரசிகர்கள் வலியுறுத்தினர். 

“கட்சி உதயம், சட்டமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து ரஜினி ஆலோசிக்க வாய்ப்பு” உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த், அரசியல் வருகை குறித்து தனது ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என கூறியிருந்தார்.

குறிப்பாக, “ வரும் 2021 ஜனவரியில் கட்சி தொடங்குகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?” என்று கேள்வியும் எழுந்தது.

இதனையடுத்து, சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் முன்னிலையில் பேசத் தொடங்கினார். முதலில், தனது ரசிகர்களுக்கு அவர் அறிவுரைகளை வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, ஆவேசமாக பேசத் தொடங்கிய நடிகர் ரஜினிகாந்த், “என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அத்துடன், “அது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது” என்றும், ரஜினிகாந்த் ஆவேசப்பட்டார்.

மேலும், “மாவட்டச் செயலாளர்களின் நடவடிக்கைகள் எனக்குத் திருப்தியாக இல்லை” என்று, மாவட்ட நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, “கட்சி தொடங்கலாமா?” என்று, ரசிகர்களை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, அவரது ரசிகர்கள், “தொடங்கலாம்” என்று சத்தமாகப் பதில் அளித்தனர்.

அதற்கு, மீண்டும் “என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது, பரவாயில்லையா?” என்று, ரஜினிகாந்த் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ரசிகர்கள் “பரவாயில்லை” என்றும், பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, “அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கும் வரை பொறுத்திருங்கள் என்றும், தொடர்ந்து உறுதியாக செயல்படுங்கள் நல்ல முடிவை விரைவில் நான் அறிவிப்பேன்” என்றும், அவர் கூறினார். 

இந்நிலையில், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரஜினியிடம் இருந்து விரைவில் அறிக்கை வெளியாக உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.