ரூ.85 லட்சத்துக்கு ஏலம் - சாதனை படைத்த சூப்பர் மேரியோ கேம்!

ரூ.85 லட்சத்துக்கு ஏலம் - சாதனை படைத்த சூப்பர் மேரியோ கேம்! - Daily news

90-களில் பிறந்தவர்களுக்கு மிகவும் பிடித்த கேமாக சொல்லப்படுவது சூப்பர் மேரியோ கேம். இதனை விளையாடாத ஒரு 90-ஸ்  கிட்ஸை அவ்வளவு எளிதாகப் பார்த்துவிட முடியாது. தற்போதைய டிஜிட்டல் உலகில் செல்போனிலேயே அசலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் விதவிதமாக ஆயிரக்கணக்கான கேம்கள் வந்துவிட்டாலும் சூப்பர் மேரியோவுக்கு என்று  இன்றும் ஒரு மவுசு உண்டு. குறிப்பாக அதன் இசையும், நகர்வுகளும் என்றும், எப்போதும் ரசிக்கக் கூடியவையாகவே உள்ளன.  

இந்நிலையில் 1985ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த Super Mario Brosன் பிரதி ஒன்றை ஒருவர் ஒரு லட்சத்து 14ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் எடுத்துள்ளார். அதாவது, பிரிக்கப்படாத புத்தம் புது சூப்பர் மேரியோ கேம் பிரதியை ஒருவர் இந்திய மதிப்பில் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார்.

சுமார் 35 ஆண்டுகள் பழைமை மிக்க வீடியோ கேம் இவ்வளவு தொகைக்கு ஏலம் போகக் காரணம், 10 புள்ளிக்கு 9.4 புள்ளிகளை அந்த பிரதி பெற்றுள்ளது. பிரிக்கப்படாத கவர், பழமை, பிரசித்தி பெற்ற விளையாட்டு எனப் பல சிறப்பம்சங்களால் இது சிறந்த புள்ளியைப் பெற்று நல்ல விலைக்கும் ஏலம் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

டல்லாஸ் பகுதியைச் சேர்ந்த ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் எனும் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. தற்போது, சூப்பர் மேரியோ ப்ரோஸ் வீடியோ கேமிற்கான ஏலம் அதன் கணிப்புகளை முறியடித்து விற்பனையில் அதிக தொகையை ஈட்டி புதிய சாதனையை படைத்துள்ளது.

இதற்குமுன், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், சூப்பர் மேரியோ கேம் 1,00,150 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 75.28 லட்சத்திற்கு மட்டுமே  விற்பனையானது. அப்போது, ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட சூப்பர் மேரியோ ப்ரோஸ். 1980 முதல் 1990 காலகட்டத்தில் வெளியானவை ஆகும்.  

இதுவரை பல்வேறு பயனர்களுக்கு  என மொத்தம் ஏழு லட்சம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 5.26 கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இது ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் நிறுவனம் கணித்ததை விட மிகவும் அதிகமான தொகை ஆகும்.

இது குறித்து தெரிவித்துள்ள ஏலம் விட்டவரும்,  பத்திரிகையாளருமான க்ரிஷ் கோஹ்லர் கூறுகையில், பிரிக்கப்படாத Super Mario Brosன் பிரதி ஒன்று ஒரு லட்சத்து 14 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட கேம். இதுவரை தனியாக ஒரு கேமை விற்பனை செய்ததில் இவ்வளவு தொகைக்கு விற்பனையானதில்லை. தற்போது, ஒரே கேம் அதிக விலைக்கு விற்கப்பட்டு சாதனையைச் செய்துள்ளது. இது எனக்கு ஒரு நல்ல நாள் என்று தெரிவித்துள்ளார்.

85 லட்சம் கொடுத் இந்த கேமை வாங்கியவர் தன்னுடைய விவரங்களை வழங்க விரும்பாததால், கேமை வாங்கியவரின் தகவல்கள் தெரியவில்லை. 

உலகளவில் இதுவரை அதிகம் விற்பனை செய்யப்பட்ட சூப்பர் மேரியோ கேம்கள் ( மில்லியன் யூனிட்)

1985 Super Mario Bros. : 40.24
2008 Mario Kart Wii : 37.24
2006 New Super Mario Bros. : 30.80
2009 New Super Mario Bros. Wii : 30.28
2005 Mario Kart DS : 23.60
2017 Mario Kart 8 Deluxe : 22.96
1990 Super Mario World : 20.61
2011 Mario Kart 7 : 18.68

இதுவரை உலகம் முழுவதும் 600 மில்லியன் யூனிட் சூப்பர் மேரியோ கேம்கள் விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

- பெ. மதலை ஆரோன்

Leave a Comment