திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் குறித்தும் ஊர் பிரச்சனைகள் பற்றியும் தெரியப்படுத்தலாம் என திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவித்துள்ளது. 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின், இப்போதே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியையும் தொடங்கிவிட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை அந்தக் குழுவுக்கு வழங்கினார்.

அதனடிப்படையில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளார். manifesto2021@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் திமுக நிர்வாகிகளும், தோழர்களும் நேரில் சந்தித்தோ அல்லது தபால் மூலமாகவோ தங்கள் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து தெரிவிக்கலாம் என டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு விரைவில் நேரில் சென்று மாவட்ட வாரியாக ஆய்வு செய்து அறிக்கையை இறுதியாக வடித்தெடுக்கும் எனத் தெரிகிறது.

டி.ஆர்.பாலுவை தலைவராக கொண்டு கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகிய 8 பேர் கொண்டு குழு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மேலும், குழு உறுப்பினர்களான கனிமொழி, ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

முன்னதாக, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்கள் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.  2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக இறங்கியுள்ளது.